ஈரோடு: தனியார் இணைய நிறுவன விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. சமீப காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செங்கோட்டையன் சென்னை கிளம்பிச் சென்றார். எனினும், பட்ஜெட் தாக்கல் தொடங்குவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் நடைபெறும் தனியார் இணைய நிறுவன விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் பகுதியில் செங்கோட்டையனுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அந்த போஸ்டர்களில் ‘திராவிடர் இயக்கத்தால் 50 ஆண்டுகள் பதவியும் பலனும் பெற்று இனப் பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நம்பியூர் மு.சென்னியப்பன், மனிதம் சட்ட உதவி மையம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில் அன்புடன் கோருகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் இடம்பெறாததால் விழாவை புறக்கணித்ததாக செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.