ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சர் சார்பில் சுகாதார அமைச்சர் சகினா இட்டு நேற்று முன்தினம் அளித்த பதில் வருமாறு:
ஜம்மு காஷ்மீரில் 2,15,905 ஏக்கர் அரசு நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்தது. இதில் 1,92,457 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டுள்ளது. 39,205 ஏக்கர் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் உத்தேச மதிப்பு ரூ.18,050 கோடி ஆகும். இந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. மீட்கப்படும் நிலத்தில் இருந்து, நிலமற்ற குடும்பங்களுக்கு தலா 1,360 சதுர அடி வீதம் வழங்கப்படுகிறது.
தொழிற்பேட்டைகளுக்காக அரசு நிலம் எதுவும் தனியாருக்கு மாற்றப்படவில்லை. எனினும் தொழில் மற்றும் வணிகத் துறையின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1,500 ஏக்கர் நிலம் அத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.