சென்னை: “நெல் குவின்டால் ரூ.2500, கரும்பு டன் ரூ.4000 என்ற தேர்தல் கால வாக்குறுதி மறந்தது போலும், தற்போது நெல் குவிண்டால் ரூ.3000, கரும்பு டன் ரூ.4500 விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கரும்புக்கு மட்டும் ஊக்கத் தொகை ரூ.349 சேர்த்து 3500 (டன்) அறிவிக்கப்பட்டுள்ளது இது நம்பிக்கை துரோகம் ஆகும். தொடர் இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்த வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “அறிவிப்புகள் ஏராளம். எல்லாவற்றுக்கும் நில வரம்பு நிர்ணயிப்பு என்பது விவசாயிகளுக்கு முழுமையாக பயனளிக்காது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில் இதன் மேம்பாட்டுக்கான திட்ட ஒதுக்கீடு இல்லை. மானாவாரி, சிறுதானிய சாகுபடியின் அவசியத்தை அமைச்சர் குறிப்பிட்டு இருந்தாலும், இதை பாதுகாக்கும் அளவில் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லை.
நெல் குவின்டால் ரூபாய் 2500, கரும்பு டன் 4000 என்ற தேர்தல் கால வாக்குறுதி மறந்தது போலும், தற்போது நெல் குவிண்டால் ரூபாய் 3000, கரும்பு டன் 4500 விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும், கரும்புக்கு மட்டும் ஊக்கத்தொகை ரூபாய் 349 சேர்த்து 3500 (டன்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை துரோகம் ஆகும். தொடர் இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்த வேளாண் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே.
வனவிலங்குகளிடமிருந்து வேளாண்மையை பாதுகாப்பதற்கான அறிவிப்புகள் இல்லாதது சரி இல்லை. சத்தீஸ்கர் மாநிலம் கடந்தாண்டு பட்ஜெட்டில் 16.7 சதம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது, தெலங்கானா மாநிலம் 11.7 சதம் ஒதுக்கீடு செய்திருந்தது, தமிழக அரசு கடந்தாண்டு 6.17 சதம் ஒதுக்கீடு செய்தது. இந்தத் தொகையை இரட்டிப்பாகிட நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால், ஒரு சதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் வேளாண் தொழில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மரபணு மாற்று விதைகள் பாதிப்பு,செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி, விளைநிலங்கள் கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிப்பு, தரிசு நில மேம்பாட்டுக்காக திட்டங்கள் எதிர்பார்த்த நிலையில் முழுமையாக இல்லை. எனவே அறிக்கை நிறைவு செய்யும் பொழுது இவைகளை கணக்கில் கொள்ள வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.