காசா,
காசா முனை பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பின் போராளிகள் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி எல்லை கடந்து நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.
இதில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் முகமூடி அணிந்தபடி, பாலஸ்தீனிய இளைஞர்கள் இருவரை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில், பொதுமக்கள் பலர் முன்னிலையில் இளைஞர்கள் 2 பேர் கடுமையாக தாக்கப்படுகின்றனர்.
ஆனால், அவர்களை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை. மக்களும் அமைதியாக அதனை வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இளைஞர்களில் ஒருவர், தரையில் புரண்டபடி அவர்களிடம் கெஞ்சியபோதும் கம்புகள், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு தடிகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
நாற்காலி ஒன்றை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றொரு நபர் எழுந்து நிற்க முடியாமல் மெல்ல நடந்து செல்கிறார். கொடூர தாக்குதலை நடத்திய முகமூடி அணிந்த நபர்கள், வாகனத்தில் ஏறி செல்வதுடன் வீடியோ நிறைவடைகிறது. ஹம்சா அல் மஸ்ரி என அராபி எழுத்துகளால் எழுதப்பட்ட அந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளிவரவில்லை. எனினும், மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியாக அது இருக்க கூடும் என கூறப்படுகிறது.