புதுடெல்லி: ரயில் கடத்தல் சம்பவத்தில், இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அடுத்தவர் மீது குற்றம்சாட்டுவதற்கு பதில், பாகிஸ்தான் உள்நாட்டு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. இதை இந்தியா வன்மையாக மறுக்கிறது.
இந்நிலையில் பலுசிஸ்தான் பகுதியில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் 450 பயணிகளுடன் கடந்த 11-ம் தேதி கடத்தப்பட்டது. இந்த ரயிலை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டனர். இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 21 பயணிகள், 4 வீரர்கள், 33 தீவிரவாதிகள் என மொத்தம் 58 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் முதலில் குற்றம் சாட்டியது.
அதன்பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவுகத் அலி கான் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானிலிருந்து, ரயில் கடத்தல் தீவிரவாதிகளுடன் போன் உரையாடல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். பாகிஸ்தான் நிலைப்பாட்டில் மாற்றம் ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சவுகத் அலி கான், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாதத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘‘பாகிஸ்தான் தெரிவித்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். தீவிரவாதம் எங்கு மையம் கொண்டுள்ளது என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் தெரியும். உள்நாட்டு பிரச்சினைகளுக்கும், தோல்விகளுக்கும், மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பதில் உள்நாட்டு விவகாரங்களிலும், பாதுகாப்பு குறைபாடுகளிலும் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்’’ எனறார். ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியிலும், ‘‘ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை விட உள்நாட்டு பாதுகாப்பில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் ’’ என்றார்.