பெங்களூரு: கர்நாடகாவில் கதக் அருகே ஹோலி கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது மர்ம கும்பல் ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த இளைஞர் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர். இதனால் 7 பேருக்கும் மூச்சு திணறல், இருமல், நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ரசாயன நீரில் மாட்டு சாணம், முட்டை, பினாயில் கலந்து மாணவிகள் மீது வீசியது தெரியவந்துள்ளது. இந்த ரசாயன நீர் மாணவிகளின் வாய், மற்றும் மூக்கின் வழியே உள்ளே சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.