புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை மகிழ்ச்சி அளிப்பதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் ஊதியங்களை திருத்த வேண்டும் என்று கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி சங்கர் உலகா தலைமையிலான இக்குழு, “விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியங்கள் தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடு பணவீக்கத்தின் தாக்கத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவிவில்லை. எனவே, அடிப்படை மட்டத்தில் உண்மையான பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஊதியக் கணக்கீட்டு முறையை முன்னுரிமை அடிப்படையில் மதிப்பாய்வு செய்து புதுப்பிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளது.
வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலைக்குழு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சீரான ஊதிய விகிதத்தை செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2025-26 பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, பணவீக்கம் மற்றும் விலைவாசியை பிரதிபலிக்கும் வகையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.
எனது இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சர் பதிலளிக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு தற்போதைய ஊதியம் களத்தில் உள்ள உண்மையான பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்று கிராமப்புற மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிதியமைச்சர் விழித்தெழுந்து ஏழைகளில் ஏழைகளாக இருப்பவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.