இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் கற்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scientist) லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளரான இவர் பாட்காஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை லெக்ஸ் பிர்ட்மென் பேட்டி எடுத்துள்ளார்.

இந்நிலையில், லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவரிடம் லெக்ஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். 3 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது;-

“இந்தியாவில் நடுநிலையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிடும் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் கற்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மேலாண்மை குறித்தும், இந்தியாவின் தேர்தல் முறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

2024 பொதுத்தேர்தலில், 98 கோடி பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். இது வட அமெரிக்காவின் மக்கள்தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட அதிகம்.

98 கோடி பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில், 64.6 கோடி பேர் மே மாதத்தின் கடுமையான வெப்பத்திலும் தங்கள் வாக்குகளை செலுத்த வீடுகளை விட்டு வெளியேறி வந்தனர். சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது.

நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்றன. இந்த செயல்முறைக்கு 900-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 5,000 செய்தித்தாள்கள் தங்கள் பங்களிப்பை வழங்கின.

இந்தியாவில் ஏழ்மையான நிலையில் உள்ள குடிமக்களும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மக்கள் வாக்களிக்கின்றனர். மேலும் ஒரு நாளுக்குள் முடிவுகளை அறிவிக்க முடிகிறது. வாக்காளர் பங்கேற்பு மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மை மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.