புதுடெல்லி
டெல்லி கான்ட் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் உடலானது சிதைந்து பல கத்திக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவரின் வயது 20 என மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 12ம் தேதி காணாமல் போனவர்கள் வழக்கை விசாரித்து வந்த ஆனந்த பர்பத் போலீசார், இறந்தவரின் புகைப்படத்தை கோரி ரெயில்வே போலீசாரிடம் தொடர்புகொண்டனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் பால்ஜித் நகரை சேர்ந்த பங்கஜ் என இறந்தவரின் மைத்துனர் நவீன் அடையாளம் காட்டினார். மேலும் மார்ச் 8ம் தேதி முதல் பங்கஜ் காணாமல் போனதாக நவீன் தெரிவித்தார். நவீன் பங்கஜை தேடிய போது விபத்து நடந்த ரெயில் நிலையம் அருகே அவரது ஸ்கூட்டர் இருப்பதை கண்டுபிடித்தார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதில் பங்கஜை ஒரு கும்பல் பின் தொடர்ந்து சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்கும் பங்கஜுக்கும் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் மார்ச் 8ம் தேதி பிரேம் நகர் ரெயில்வே கிராசிங் அருகே பங்கஜை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
இருப்பினும் இந்த கொலையை மறைக்க பங்கஜின் உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசினர். இதனால் இது ஒரு தற்கொலை என அனைவரும் நம்புவார்கள் என எண்ணி இதனை செய்தனர். இவர்கள் நினைத்தது போலவே அந்த தண்டவாளத்தில் வந்த ரெயில் உடல் மீது மோது உடலை துண்டாக்கியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய 5வது நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.