சனா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஏமன் நாட்டின் பகுதியை குறிவைத்து தீவிர தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹவுதி கிளர்ச்சிக் குழுவை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஈரானை அவர் எச்சரித்துள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தும் வரையில் தங்களது தரப்பில் தாக்குதல் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க தாக்குதலில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கப்பல் மற்றும் வான்வழி போக்குவரத்து, கடற்படை சொத்துக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச கடல் வழி போக்குவரத்து சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், தீவிரவாதிகளின் தளங்கள், அந்த அமைப்புகளின் தலைவர்களை இலக்காக கொண்டு நமது தேசத்தின் துணிச்சல் மிக்க போர் வீரர்கள் தற்போது வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
“ஹவுதி படையினர் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கப்பல், வானூர்தி மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதனால் அவர்கள் மீது தீவிர தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
முந்தைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் அவர்களுக்கு கொடுத்த பதிலடி பலவீனமானதாக இருந்தது. செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்கள் உண்டு. கடந்த காலங்களில் ஏவுகணைகளை கொண்டு அவர்கள் நமது வானூர்திகளை தாக்கி உள்ளனர். அதோடு நமது படைகள் மற்றும் நட்பு நாடுகளின் படைகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்துக்கு பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் உயிரும் இதில் பறிபோயுள்ளது.
அமெரிக்க கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் இது மாதிரியான தாக்குதலை இனி பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும். வணிகம் சார்ந்து உலகின் முக்கிய நீர் வழி பாதையில் அவர்களது தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உலக நாடுகளின் நீர்வழி போக்குவரத்தை எந்த தீவிரவாத சக்தியும் தடுக்க முடியாது.
நான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களது செயல்பாடுகளை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும். ஹவுதி கிளர்ச்சிக் குழுவை ஆதரிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என ட்ரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தக்க பதிலடி தரப்படும். மேலும், தலைநகர் சனாவில் பொதுமக்கள் பலர் உயிர் இழந்துள்ளதாக ஹவுதி கூறியுள்ளது. அமெரிக்கா ஏமன் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் உலக போர்களை நிறுத்துவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல், ரஷ்யா – உக்ரைன் போர் போன்றவற்றை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் அவரது பார்வை இப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பக்கம் திரும்பி உள்ளது. செங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது ஹவுதி.