கோவை: திமுக ஆட்சியில் கழிவறை கட்டுவதில் கூட ஊழல் நடந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கோவை பாஜக காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடக்கும் அதே நேரத்தில் சாராய ஆலைகளிலும் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்தப்போது குவார்ட்டருக்கு ரூ.10, புல் பாட்டிலக்கு ரூ.40 என கரூர் கேங்க் வசூலித்தாக பேசப்பட்டது. அவர்கள் அலுவலகத்திலும் சோதனை நடந்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை தொகையை விட அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக சாராய வியாபாரம் தமிழகத்தில் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆயிரம் கோடி என்பது ‘டிப் ஆப் தி ஐஸ்பெர்க்’. முழு விசாரணைக்கு பிறகே எத்தனை கோடி என தெரிய வரும். இப்பிரச்சனையை கடைக்கோடி வரை மக்களிடம் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.
தொடர்ந்து 5,000 கடைகள் மற்றும் எலைட் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் கழிவறை கட்டுவதில் கூட ஊழல் நடந்துள்ளது. புதிய கல்வி கொள்கை, மற்றும் மூன்று மொழிக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணி துரிதமாக நடக்கிறது. விரைவில் ஒரு கோடி கையெழுத்து பெறுவோம்.
முதல்வர் ஸ்டாலின் பிற முதல்வர்களை தொகுதி மறுவரையறை தொடர்பாக அழைப்பது புலிக்கு பயந்து தன் மீது படுத்துக்கொள் என அழைப்பதற்கு சமம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காளப்பட்டி பகுதியில், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவும் பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார்.