க்வெட்டா: பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வாகனத்தை பலூச் விடுதலைப் படை எனும் தீவிரவாத அமைப்பு தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 7-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. சுமார் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (மார்ச் 16) நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து டஃப்டான் நகருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பலூச் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மையில் ரயிலை தாக்கி இந்த அமைப்பு தான் அதில் இருந்த பயணிகளை கடத்தி இருந்தது. அதோடு அதில் இருந்த ராணுவ வீரர்களையும் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என அந்த நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு கடுமையான கண்டனத்தை அந்த மாகாண முதல்வர் சர்பராஸ் தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பான தீவிரவாத அமைப்பின் கடைசி நபர் உயிரிழக்கும் வரையில் தங்களது நடவடிக்கை தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் சுமார் 90 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பலூச் அமைப்பு கூறியுள்ளது.