மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனிப்பட்ட பயணமாக வியட்நாம் சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த புத்தாண்டின் போதும், ராகுல் காந்தி வியட்நாம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், “ராகுல் காந்தி புத்தாண்டின்போது வியட்நாமில் இருந்ததோடு, ஹோலியின் போதும் வியட்நாம் சென்றுள்ளார். அவர் தனது சொந்த தொகுதியில் செலவிடும் நேரத்தைவிட, அதிக நேரம் வியட்நாமில் கழித்துக்கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு வியட்நாம் மீது இருக்கும் அதிக பாசத்தை அவர் விளக்க வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்த அடுத்த சில நாட்களிலேயே ராகுல் காந்தி வியட்நாமிற்கு சென்றிருந்தார். அப்போது பாஜகவின் அமித் மால்வியா, “நாடே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணத்திற்கு துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வியட்நாம் சென்றுவிட்டார். மன்மோகன் சிங்கின் மரணத்தை ராகுல் காந்தி அரசியலாக்கினார். பின்னர், அவரை மதிக்காமல் வெளிநாடு சென்றது நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல” என்று சாடியிருந்தார்.
பாஜகவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, வியட்நாமின் பொருளாதார மாடலை படிக்க ராகுல் காந்தி வியட்நாம் சென்றிருக்கலாம் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.