புளோரிடா: அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ். அவரை அழைத்து வர புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த நிலையில் பூமி திரும்பியதும் உடல் ரீதியான சவால்களை அவர் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் சுமார் 9 மாத காலம் அவர் தங்கி இருந்ததுதான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அவரோடு விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோரும் இதே சவாலை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமி கோளுக்கு சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதை உலக நாடுகள் ஆவலோடு எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் இருந்த காரணத்தாலும் ஈர்ப்பு விசையின்மையாலும் உடல் சார்ந்த சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக இதற்கு முன்பு விண்வெளிக்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளனர்.
பூமிக்கு மீண்டும் திரும்பியதும் தலைச்சுற்றலில் இருந்து மீள தனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டதாக தனது அனுபவத்தை விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ் பகிர்ந்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமி திரும்பிய உடன் நடப்பதற்கு சிரமப்படக்கூடும் என நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் லெராய் சியாவோ கூறியுள்ளார். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாதது இதற்கு அவர் சொல்லியுள்ள காரணம். அவர்களுக்கு கால் பகுதியில் Calluses பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தசை சிதைவு, எலும்பு சார்ந்த பிரச்சினைகளை விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள கூடும் என நாசா கூறியுள்ளது. உடற்பயிற்சி மூலம் விண்வெளி வீரர்கள் இதற்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.