வாக்காளர் பிரச்சினை குறித்து ஏப்.30-க்குள் ஆலோசனை கூறலாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

வாக்காளர் பிரச்சினை குறித்த ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 பேருக்கு ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், அவர்களை போலி வாக்காளர்களாக கருத முடியாது. அவர்களால் 2 இடங்களிலும் வாக்களிக்க முடியாது. தங்களுடைய வாக்குப்பதிவு மையத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும் எனினும், இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் 18-ம் தேதி மத்திய உள் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மற்றும் ஆதார் ஆணைய தலைமைச் செயல் அதிகாரி ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஒரே எண் 2 வாக்காளர்களுக்கு ஒதுக்கப்படுவதைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுதவிர, வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ) அல்லது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) நிலையிலான, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து, அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரச்சினைக்குரிய வாக்காளர் அடையாள அட்டைகள் கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வநியோகிக்கப்பட்டதாகவும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.