US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு' – பின்னணி என்ன?

‘காசா போரை நிறுத்த வேண்டும்…’,’உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்’… – இப்படி உலகில் எந்தெந்த நாடுகளில் போர்கள், தாக்குதல்கள் நடந்து வருகிறதோ, அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தும், அந்த நாடுகளின் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இவரது கடும் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கை தற்போது ஏமனின் ஹவுதி பக்கம் திரும்பியுள்ளது. 2023-ம் ஆண்டு இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடங்கியபோது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஹவுதி, செங்கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பெரும் இடையூறுகளைக் கொடுத்துவருகிறது. இதனையடுத்து, ஹவுதிகளுக்கு உதவி செய்துவரும் ஈரானை அவர்களுக்கு செய்யும் உதவியை நிறுத்துமாறு எச்சரித்தது அமெரிக்கா.

ஹவுதி, ஈரானை எச்சரித்த ட்ரம்ப்!

ஆனால், ஈரானின் உதவியும், ஹவுதி செங்கடலில் நடத்தும் இடையூறுகளும் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப் உத்தரவின் பேரில், நேற்று அமெரிக்கா ஏமனின் மீது வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் கிட்டதட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களையும், உயிரிழப்புகளையும் உறுதி செய்துள்ளது ஏமனை ஆளும் ஹவுதி அரசு.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்கா ஏமனின் மீது தொடுத்த முதல் பெரிய தாக்குதல் இது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “இன்று நான் அமெரிக்க ராணுவத்திடம் ஏமனில் இருக்கும் ஹவுதி தீவிரவாதிகளின்மீது சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான தாக்குதலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தேன்.

அமெரிக்கா கொடியிட்ட வணிகக் கப்பல் பாதுகாப்பாக செங்கடல், சூயஸ் கால்வாய், ஏடன் வளைகுடா வழியில் சென்று கிட்டதட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு செங்கடல் வழியாக அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி பல முறை தாக்குதல் நடத்தியது.

இனி அமெரிக்கா கப்பல்கள் மீதான ஹவுதியின் தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டது. எங்களுடைய கொள்கையை அடையும் வரை தாக்குதல்கள் தொடரும்.

ஹவுதி தீவிரவாதிகளே, உங்களுடைய நேரம் முடிந்துவிட்டது, உங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அது இன்றிலிருந்து தொடங்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் இதுவரைக்கும் கண்டிராத அளவுக்கு நரகம் உங்கள் மீது மழை பொழியும்.

ஈரானுக்கு: ஹவுதிக்கு நீங்கள் ஆதரவளிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், உங்களிடம் அமெரிக்கா அன்பாக நடந்துக்கொள்ளாது” என்று எச்சரித்து பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், ஏமன் ஹவுதிகளோ, ‘இதற்கு பதிலடி தராமல் இருக்கமாட்டோம்’ என்று இந்தத் தாக்குதலுக்கு பதிலளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.