புதுடெல்லி: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண், விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். நியூசிலாந்தில் மார்ச் 15, 2019 அன்று நிகழ்ந்த கிறைஸ்ட் சர்ச் பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி, நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை தாக்குதலாக இருந்தாலும் சரி, எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அவசியம். பயங்கரவாத, பிரிவினைவாத மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக எங்களின் தொடர் ஒத்துழைப்பு இருக்கும்.
இந்தச் சூழலில், நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த இந்தியாவின் கவலையை நான் பகிர்ந்து கொண்டேன். இந்த சட்டவிரோத சக்திகளுக்கு எதிராக நியூசிலாந்து அரசாங்கத்திடமிருந்து இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பைப் பெறும். இந்தியாவும் நியூசிலாந்தும் பரஸ்பரம் நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளன. இது பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டின் திறனை அதிகரிக்கும்.
பால், உணவு பதப்படுத்துதல் மற்றும் மருந்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் முதலீடு ஊக்குவிக்கப்படும். இந்தியாவும் நியூசிலாந்தும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ – பசிபிக் பகுதியை ஆதரிக்கின்றன. விரிவாக்க கொள்கையை அல்ல, வளர்ச்சிக்கான கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், “வளமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு பங்களிப்பதில் நமது நலன்கள் குறித்த பகிரப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான எங்கள் வலுவான உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன்” என்று கூறினார்.
இதனிடையே, இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்ட பலன்கள் குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்முறை நிபுணர்கள் மற்றும் திறன்வாய்ந்த பணியாளர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கும் நடவடிக்கை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் நியூசிலாந்து இணைகிறது. பேரிடர் மீட்பு உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் நியூசிலாந்து உறுப்பினராகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும் நியூசிலாந்து சுங்க சேவைக்கும் இடையே பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் நியூசிலாந்தின் முதன்மைத் தொழில்கள் அமைச்சகம் இடையே தோட்டக்கலை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நியூசிலாந்தின் முதன்மை தொழில்துறை அமைச்சகம் இடையே வனத்துறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து கல்வி அமைச்சகம் இடையே கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து அரசின் விளையாட்டு அமைச்சகம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.