சென்னை: டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து சென்னையில் போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், அத்தகையை பெரும் ஊழலுக்கு எதிராக போராட முயன்ற பாஜக-வின் தலைவர்களை கைது செய்வதும், வீட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் காவல்துறை, அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக போராடும் தலைவர்களை கைது செய்திருப்பது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
எனவே, சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும் என தமிழக அரசையும் காவல் துறையையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.