ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும் ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல், சூயஸ் கால்வாய், ஏடன் வளைகுடா ஆகியவை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் மீது ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் வணிக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 4 மாதங்களுக்கு முன்பாக செங்கடல் வழியாக சென்ற அமெரிக்க போர்க்கப்பல் மீதும் ஹவுதி தீவிரவாதிகள் பலமுறை தாக்குதல் நடத்தினர். இதனால் கடந்த ஓராண்டாக அமெரிக்க வணிக கப்பல்கள் உட்பட பல நாட்டு கப்பல்கள் செங்கடல், ஏமன் வளைகுடா வழியாக செல்வதில்லை.
ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் செங்கடல் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவு செய்தார். ஏமனில் அத்து மீறும் ஹவுதி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தயாரிக்கும்படி கடற்படையினருக்கு அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார். இதற்கான இறுதி உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க எம்.பி.க்களும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.
இதையடுத்து அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் ஹேரி எஸ் ட்ரூமேன்’ விமானம் தாங்கி போர்க்கப்பல், யுஎஸ்எஸ் ஜியார்ஜியா நீர்மூழ்கி கப்பல் உட்பட பல போர்க் கப்பல்கள் ஏமனில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் படைகளும் இணைந்தன.
ஏமனில் ஹவுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சானா, சாதா, தாமர் மற்றும் அப்ஸ் ஆகிய பகுதிகளில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. சானாவில் உள்ள விமானதளம், கிழக்கு ஜெராப் மாவட்டம் ஆகிய இடங்களில் ஹவுதி படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 31 பேர் உயிரிழந்தனர், 101 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏமன் ஏமன் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு குண்டு வெடிப்பு சத்தம் பூகம்பம் ஏற்பட்டது போல் இருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குண்டு மழை பொழியும்: ஏமன் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: ஹவுதி தீவிரவாதிகளே! உங்கள் நேரம் முடிந்து விட்டது. உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமெரிக்க சொத்துக்களை பாதுகாக்க இந்த தாக்குதல் அவசியமானது. எந்த தீவிரவாத சக்தியும், அமெரிக்க வர்த்தக மற்றும் போர்க்கப்பல்கள் உலகம் முழுவதும் தடையின்றி பயணம் செய்வதை நிறுத்த முடியாது. ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஆதவளிப்பதை ஈரான் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் இங்கு நடைபெறும் சம்பவங்களுக்கு எல்லாம் ஈரான் பொறுப்பேற்க வேண்டும். இது நன்றாக இருக்காது. செங்கடல் பகுதியில் எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை, ஹவுதி தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கப்படையின் தாக்குதல் தொடரும்.
ஹவுதி அச்சுறுத்தலுக்கு சரியான நடவடிக்கையை முன்னாள் அதிபர் ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. சூயஸ் கால்வாய், செங்கடல், ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடந்தா ஓராண்டாக கடற்கொள்ளை, வன்முறை, தீவிரவாத நடவடிக்கைகளில் ஹவுதி படையினர் ஈடுபடுகின்றனர். இந்த தொடர் தாக்குதல்களால் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இப்பகுதியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும், அமெரிக்க கப்பல் மற்றும் விமான போக்குவரத்தை பாதுகாக்கவும் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ஏமனில் ஹவுதி படையினருக்கு எதிரான தாக்குதல் சில வாரங்கள் தொடரலாம் என கூறப்படுகிறது.
பதிலடி கிடைக்கும்: இந்த தாக்குதல் குறித்து ஹவுதி விடுத்துள்ள செய்தியில், ‘‘அமெரிக்கா நடத்திய தாக்குதல் போர் குற்றம். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். அச்சுறுத்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளோம். காசாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்’’ என கூறியுள்ளது.
ஈரான் எச்சரிக்கை: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஈரான் நாட்டின் வெளியுறவு கொள்கை விஷயத்தில் உத்தரவிட அமெரிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கும், தீவிரவாதத்துக்கும் ஆதவரிப்பதையும், ஏமன் மக்களை கொல்வதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.