புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) அன்று இணைந்தார். தனது ட்ரூத் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி சொல்லி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் அண்மையில் சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதை ட்ரூத் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அதில் இணைந்த பிரதமர் மோடி, ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.
“ட்ரூத் சோஷியலில் இணைவதில் மகிழ்ச்சி! இந்த தளத்தில் உள்ள அனைவருடனும் தொடர்பு கொள்ளவும், வரும் நாட்களில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தனது முதல் ட்ரூத் பதிவில் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல்: கடந்த 2021-ல் ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழுமம் ட்ரூத் சோஷியல் எனும் சமூக வலைத்தளத்தை நிறுவியது. ட்விட்டர் (இப்போது எக்ஸ்) மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதை உருவாக்கி இருந்தார். 2022 முதல் பொது பயன்பாட்டுக்கு ட்ரூத் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டின் தரவுகளின் படி சமூக வலைதள செயலிகளுக்கான ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் 38-வது இடத்தை ட்ரூத் சோஷியல் பிடித்திருந்தது.