பல்லடம்: தக்காளிக்கு போதிய விலை இல்லாததால், தோட்டத்தில் விளைந்த தக்காளியை டிராக்டர் மூலம் இன்று (மார்ச் 17) அழித்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அடுத்த அல்லாளபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், ரூ.1 லட்சம் செலவு செய்து தக்காளி பயிரிட்டார். கடந்த 15 நாட்களாக அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், தக்காளி விலை படுபாதாளத்தில் சென்றதால் விரக்தி அடைந்தார். மேலும், கடந்த 2 நாட்களாக 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 என விற்பனையானதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
தக்காளி பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாடகை உள்ளிட்டவைகளுக்கு கூட கட்டுபடி ஆகாமல் இருந்தது. ஊரில் உள்ள கிராம மக்களுக்கு தனது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை இலவசமாக பறித்து கொள்ளுமாறு சொன்னார். அதேபோல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டனர். இன்று திடீரென டிராக்டர் மூலம் 2 ஏக்கரில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளியை அழித்தார்.
இது குறித்து செந்தில்குமார் கூறும்போது, “ஆண்டுதோறும் இந்த பிரச்சினை தொடர்கிறது. திடீரென்று தக்காளி விலை சிகரத்துக்கு செல்கிறது. திடீரென்று படுபாதாளத்துக்கும் செல்கிறது. நிலையான விலை இல்லாததால், தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் இதனை விட்டு வெளியேறிவிட்டனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க, விவசாயிகளை அரசு பாதுகாக்கும் வகையில் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தக்காளிக்கு போதிய விலை இல்லாத நிலையில் தனது தோட்டத்தில் டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் போல் மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.