பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தங்களுக்கு திருமணமான ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர் மீது எந்த நடவடிக்கையையும் அடுத்த விசாரணை (மார்ச் 24) வரை எடுக்க கூடாது என கூறியுள்ளார். இதற்கு வருவாய் புலனாய்வு இயக்குநரக தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ரன்யா ராவை ஜதின் ஹுக்கேரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்தார் என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும் தனிப்பட்ட சிக்கல் காரணமாக ஒரே மாதத்தில் (டிசம்பர்) இருவரும் பிரிந்து விட்டனர் என நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
ரன்யா ராவ் கைதான நிலையில் திருமணத்துக்கு பிறகு தனது மகள் தங்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுவது இல்லை என போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ் தெரிவித்திருந்தார். இதையடுத்து அனைவரது கவனமும் ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி பக்கம் திரும்பியது. இந்த நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் தன்னையும் போலீஸார் கைது செய்யக்கூடும் என அஞ்சி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதற்கு மத்தியில் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு டிஜிபி ராமசந்திர ராவை இன்று (மார்ச் 17) விசாரித்தது. இந்த விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் வெளியாகும் என தகவல். தங்க கடத்தலில் அவருக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவை விசாரித்ததில் அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு நட்சத்திர விடுதியின் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.