லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. மற்ற அணிகளை விட மிடில் ஆர்டர் பலமாக தெரிந்தாலும், பந்து வீச்சாளர்கள், நம்பும்படியான தொடக்க வீரர்கள் என யாரும் இல்லை. அணியில் நம்பும்படியான பவுலர்களாக இருந்த மொஹ்சின் கான், மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக லக்னோ அணிக்காக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விடாப்பிடியாக ரிஷப் பண்டை அதிக விலைக்கு வாங்கிய லக்னோ
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தினார். ஆனால் கே.எல்.ராகுலுக்கும் அந்த அணியின் நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால், அந்த அணி கே.எல்.ராகுலை கழட்டி விட்டது. இச்சூழலில் கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடந்தது.
மேலும் படிங்க: RCB vs KKR: இரு அணிகளின் இம்பாக்ட் பிளேயர் யார்? பிளேயிங் XI இதோ!
அதில் கே.எல்.ராகுல் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். லக்னோ அணியின் நிர்வாகமோ, ரிஷப் பண்ட்டை பெரிய விலைக்கு விடாப்பிடியாக வாங்கியது. அதாவது டெல்லி அணி ரூ.20 கோடி வரை ஏலத்தில் சண்டையிட்ட நிலையில், லக்னோ அணி ரூ.27 கோடி வரை சென்று ரிஷப் பண்டை வாங்கியது. இதனால் லக்னோ அணியின் பர்ஸ் காலியானது. இதன் காரணமாக அந்த அணியால் வேறு எந்த பெரிய வீரரையும் வாங்க முடியாமல் போனது.
லக்னோ அணி நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏற்கனவே அந்த அணியில் இருந்த ஆவேஷ் கானை மீண்டும் ஏலத்தில் வாங்கியது. இந்த சூழலில் அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களாக கருதப்பட்ட மயங்க் யாதவ், மொஹ்சின் கான் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரை விளையாடுவார்களா? என்ற சந்தேகம் உள்ளதால் லக்னோ அணி பரிதாபத்திற்குரிய அணியாக தற்போது மாறி இருக்கிறது.
ஷர்துல் தாக்கூரிடம் சென்ற லக்னோ அணி
இந்த நிலையில்தான், லக்னோ அணி நிர்வாகம் ஷர்துல் தாக்கூரிடம் சென்றுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷர்துல் தாக்கூர் சென்னை அணியில் இருந்தார். ஆனால் 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ஷர்துல் தாக்கூர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். சையது முஸ்தாக் டிராபி தொடரில் 15 விக்கெட்கள், ரஞ்சியில் 35 விக்கெட்கள் என அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து தற்போது அவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதுவரை இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், மயங்க் யாதவ் அல்லது வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற முடியாமல் போனால் அவர்களுக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் அறிவிக்க முடியும். இப்படியான ஒரு சூழலை மனதில் வைத்துதான் லக்னோ அணி இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது ஷர்துல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: CSK vs MI – டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு