போபால்: ம.பி.யின் சிவபுரி மாவட்டம், கொலாரஸ் பகுதியை சேர்ந்தவர் மந்திரவாதி ரகுவீர் தகாத். இவரிடம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஆண் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்து காட்டியுள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ரகுவீர் தகாத் சடங்குகளை செய்துள்ளார். அப்போது அவர் குழந்தையை தலைகீழாக பிடித்து கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு மேலே காட்டியுள்ளார். இதில் குழந்தையின் கண்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தையின் கண்கள் சேதம் அடைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கண் மருத்துவர் கிரிஷ் சதுர்வேதி நேற்று கூறுகையில், “தீயின் வெப்பத்தால் குழந்தையின் கண்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. எனவே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளோம். குழந்தைக்கு பார்வை திரும்புமா என்பது 72 மணி நேரத்துக்கு பிறகுதான் தெரியவரும்” என்றார். இதுதொடர்பாக ரகுவீர் தகாத்தை போலீஸார் கைது செய்தனர்.