மத்திய பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை மீட்பதற்கு சென்ற காவல் துறை அதிகாரியை ஒரு கும்பல் கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மவுகஞ்ச் மாவட்டத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது கத்ரா கிராமம். இங்குள்ள ஒரு கும்பல் அசோக் குமார் என்பவர் உயிரிழந்ததற்கு பழிதீர்க்கும் விதமாக சன்னி திவேதி என்பவரை கடத்திச் சென்று ஒரு அறையில் பிணைக் கைதியாக அடைத்துவைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளது. இதில், அவர் இறந்துவிட்டார். உண்மையில் அசோக் குமார் என்பவர் இரண்டு மாதத்துக்கு முன்பு விபத்து ஏற்பட்டு இறந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அந்த கும்பல் நம்ப மறுத்துவிட்டது.
இந்த நிலையில், சன்னி திவேதியை மீட்பதற்காக காவல் துறை அதிகாரி அங்கிதா சுல்யா தலைமையிலான குழு அங்கு சென்றது. இதில் மாநில ஆயுத படைப்பிரிவைச் சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராம்சரண் கவுதமும் அடங்குவார். கலவரக்கார்களுடன் அவர் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தபோது அந்த கும்பல் சரமாரியாக கற்களைக் கொண்டு வீசி திடீரென தாக்க ஆம்பித்தது.
இதில், காவல் அதிகாரி ராம் சரண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், ஷாபூர் காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு கொடுங்காயம் ஏற்பட்டது.
பின்னர் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மவுகஞ்ச் எஸ்பி ரஸ்னா தாக்குர் தெரிவித்துள்ளார்.