மும்பை: “சத்ரபதி சம்பாஜி மகாராஜா பற்றிய ‘சாவா’ திரைப்படமே முகலாய மன்னர் அவுரங்கசீப் மீது மக்களின் கோபத்தைத் தூண்டியது” என்று நாக்பூர் கலவரம் குறித்து மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
நாக்பூர் கலவரம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னது. மேலும், அப்படம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் அவுரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அப்படமே தூண்டிவிட்டுள்ளது. இவை அனைத்தையும் மனதில் கொண்டு மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் சாதி, மத பேதமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாக்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் நடத்திய போராட்டத்தில் மதம் தொடர்பான பொருள்கள் எரிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. இது திட்டமிட்ட சதியுடன் நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகிறது. சட்டத்தைத் தங்களின் கைகளில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. நாக்பூர் வன்முறையில் மூன்று இணை ஆணையர்கள் உட்பட 33 காவல் துறையினர் காயம் அடைந்ததனர். காவல் துறையினர் மீதான தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
பின்னணியும், நாக்பூர் கலவரமும்: சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சாவா’ (chavva) எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. லக்ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷால் மராத்திய மன்னர் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதையும் சித்தரிக்கிறது. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படம் தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச் 26 வரை பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல் மீண்டும் எழுந்தது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் கூறுகையில், “அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம்.
அரசு சார்பில் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம்” என்று தெரிவித்தனர். இதற்காக, விஎச்பி, பஜ்ரங்தளம் சார்பில் மகாராஷ்டிராவில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் பிரச்சினையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தும் விவகாரத்தில் கலவரம் வெடித்துள்ளது. சமாதியை அகற்றக் கோரி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜ்ரங்தளம் அமைப்பினர் சுமார் 250 பேர் நாக்பூரில் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தினர். வென்கோவர் பகுதியில் இந்த ஊர்வலம் வந்தபோது அங்கு அவுரங்கசீப்பின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக எழுந்த புரளி காரணமாக முஸ்லிம் இளைஞர்களும் வீதிக்கு வந்தனர். இதையடுத்து, இருதரப்பு மோதல் வெடித்தது. இதை தடியடி நடத்தி போலீஸார் அடக்க முயன்றனர். இதில் 14 போலீஸார் உட்பட பலரும் காயம் அடைந்தனர். மேலும், போலீஸாரின் 3 வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு அங்கு அமைதி திரும்பிய நிலையில் நகரின் மூன்று பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.