உதகை: 127-வது மலர் காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16 முதல் 21 வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் மாதம் 1-ம் தேதி நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடைவிழா நடக்கும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர்க்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பபணிகள் வருகை புரிகின்றனர்.
இம் மலர்க்காட்சி மற்றும் இதர காட்சிகள் ஆண்டு தோறும் மலர்க்காட்சி மற்றும் பழக்காட்சி குழுவினரால் காட்சிகள் நடத்துவதற்கான தேதிகள், ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்தான தீர்மானங்கள் அனைத்தும் மலர் மற்றும் பழக்காட்சி குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலர் மற்றும் பழக்காட்சி குழுவில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் மற்றும் குழுத்தலைவர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழு உபதலைவர், நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் குழு செயலாளர், அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் குழு இணை செயலாளர், திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் முக்கிய உறுப்பினர்களைக் கொண்டு இம்மலர் மற்றும் பழக்காட்சி குழுக் கூட்டம் நடைபெறும்.
இந்தாண்டு மலர் மற்றும் பழக்காட்சி குழுக் கூட்டம் இன்று உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலைத்துறை இயக்குநர் மற்றும் குழுத்தலைவர் குமாரவேல் பாண்டியன், (இணையவழி மூலம்), நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழு உபதலைவர் லட்சுமி பவ்யா , தலைமையில் நடைபெற்றது.
அதனடிப்படையில் இந்தாண்டு இம்மாவட்டத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 13-வது காய்கறி காட்சி கோத்தகிரியில் மே மாதம் 3 மற்றும் 4-ம் தேதிகளிலும், 11-வது வாசனை திரவிய காட்சி கூடலூரில் 9 முதல் 11-ம் தேதிகளிலும், 20-வது ரோஜா காட்சி, அரசு ரோஜா பூங்காவில் மே மாதம் 10 முதல் 12-ம் தேதி வரையிலும் 127-வது மலர் காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும், 65-வது பழக்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாதம் 23-ம் தேதி மற்றும் 25-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் மாதம் 1-ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, தோட்டக்கலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.