சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் செங்கோட்டையன் பேசுவதற்கு பேரவை தலைவரிடம் பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ ஒவ்வொரு துறையாகப் பேசிக் கொண்டிருந்தார். பள்ளிக்கல்வித் துறையைப் பற்றி பேசியபோது, அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டி பேசினார்.
அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கையை உயர்த்தி பேரவை தலைவரிடம் அனுமதி கேட்டார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இதுபற்றிய விவரம் செங்கோட்டையனுக்குத் தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதையடுத்து, செங்கோட்டையன் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் பழனிசாமி சைகை மூலமாக கேட்டார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீப காலமாக பழனிசாமி – செங்கோட்டையன் இடையே கருத்து மோதல், அதிருப்தி இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேசுவதற்காக பழனிசாமி வாய்ப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.