மதுரை: திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாகிவிடக் கூடாது என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய யெலாளர் வேலூர் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜகவில் வக்பு வாரிய திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மதுரையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) ஆலோசனை நடத்தினர். இதில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வேலூர் இப்ராகிம் கூறியது: “மத்திய அரசின் வக்பு திருத்தச் சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால் வக்பு திருத்த சட்டம் குறித்து திமுக தவறாக பிரச்சாரம் செய்து வருகிறது. இதை பாஜக கண்டிக்கிறது.
இஸ்லாமியர்களுக்கான சட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு திரித்து பேசப்படுகிறது என்பதை பொதுக் கூட்டம், பிரச்சாரம், துண்டு அறிக்கை விநியோகம் செய்தல் மூலம் மக்களிடம் கொண்டுச் செல்வோம். வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக பேசும் திமுகவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாடு எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கி செல்கிறது. குறிப்பிட்ட மதம், சாதி, இனத்தை தாஜா செய்யும் அரசியல் இனி நடக்காது.
திமுக நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும், மாநிலத்தில் மற்றொரு மாதிரியாகவும் நடிக்கிறது. திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாகிவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் பிரச்சாரத்தை முறியடிக்கவும், இஸ்லாமியர்களின் உண்மையாக காவலனாக பாஜக இருக்கிறது என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வோம்.
பாஜக வாக்கு வங்கிக்காக எந்த சமூகத்தையும், மதத்தையும் அரவணைப்பது கிடையாது. வக்பு சட்டம் வாக்கு வங்கிக்கானது இல்லை. தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என இஸ்லாமியர்கள் நினைக்கும் போது பாஜகவுக்கு வாக்களிப்பர்” என்று அவர் கூறினார்.