மும்பை: “நாக்பூரில் நடந்த மதக் கலவரம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதியாக இருக்கலாம்.” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கும்பல் குறிப்பிட்ட சில வீடுகள், வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டி முதல்வர் பட்னாவிஸ் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாக்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் பட்னாவிஸ், “நாக்பூரில் நடந்த மதக் கலவரம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதியாக இருக்கலாம். கலவரக்காரர்கள் கற்கள், ஆயுதங்களை திட்டமிட்டுக் கொண்டுவந்துள்ளனர். இக்கலவரத்தில் காவல்துறையைச் சேர்ந்த 33 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் துணை ஆணையர்கள் ஆவர். மேலும், மூத்த காவல் அதிகாரி ஒருவரை கோடரி கொண்டு தாக்கியுள்ளனர்.
ஒரு வன்முறை கும்பல் சரியாகத் திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் நாக்பூரி சில பகுதிகளில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகளுடன் பொதுமக்களில் ஐந்து பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அந்த ஐந்து பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டனையில் இருந்து தம்பிக்க முடியாது.” என்றார்.
நடந்தது என்ன? முன்னதாக நேற்று (மார்ச் 17) நாக்பூரின் மஹல் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் என 200 முதல் 250 பேர் திரண்டனர். அவர்கள் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை எரித்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது.
இதன் எதிரொலியாக சுமார் இரவு 7.30 மணியளவில் பல்தர்புராவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது, தீ வைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.அதிரடி காவல்படையினர் திரண்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
ஊரடங்கு அமல்: இந்நிலையில், அமைதியை உறுதி செய்யும்வகையில் சட்டப்பிரிவு 163-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 5-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த உத்தரவு அரசுப் பணியாளர்கள், அத்தியாவசிய சேவைப் பணியில் உள்ளோர், பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.