புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் முதல்வர் ரங்கசாமி. அதனடிப்படையில் இன்று, “புதுச்சேரியில் சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி எந்தப் பெயர் பலகையிலும் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழியைத் தவிர்த்துவிட்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன” என்று எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சுமத்தினர்.

அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பிராந்தியங்களிலும், பகுதிகளிலும் இனி அனைத்து வியாபாரிகள், வணிகர்கள் கட்டாயமாக தமிழில் பெயர் வைக்கவேண்டும். பெயர் பலகை மற்றும் கடைகளின் பெயர்கள் தமிழில்தான் இருக்கவேண்டும். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது கடமை மற்றும் உணர்வு. அதேபோல அரசுத் துறைகளின் அழைப்பிதழ்களிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதேபோல தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.