மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இன்று (மார்ச் 18) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 16-ம் தேதி இரவு செய்தியாளர்களிடம் பேசும்போது, “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் பேசி வருகிறோம். 18-ம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும். அன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.