பெரியார் விமர்சனத்திலேயே தேங்கி நின்ற நாம் தமிழர் கட்சி, சமீப நாட்களாக சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதானப் படுத்தியுள்ளது. அடுத்தாக மீனவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி திருப்போரூரில் நா.த.க-வின் பொதுக் கூட்டம் பல்வேறு சர்ச்சைகளையும், சாதிய வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்துகிறார்களா.. பா.ஜ.க-வை விமர்சிக்க மறுக்கிறாரா சீமான்.. போன்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்

கடந்த மார்ச் 16-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் பஞ்சமி நில மீட்பு கோரிக்கைக்காக பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் சீமான் தலைமையில் ஒருங்கிணைத்தது நா.த.க. அதில், பல்வேறு சமூக கட்சித் தலைவர்களை மேடையேற்றினர். குறிப்பாக கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடார் சங்கம், பறையர் பேரவை, இஸ்லாமிய இயக்கமான தேசிய லீக் கட்சி, கிறிஸ்துவ அமைப்பான சிறுபான்மை மக்கள் நலக் கட்சி மற்றும் வலது அரசியல் இயக்கங்களான தமிழர் தேசம் கட்சி, தென் இந்திய பார்வேட் கட்சியையும் சிறப்பு விருந்திருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.

இது 2026 தேர்தல் வியூகமாகக்கூட இருக்கலாம் என நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமர் நில மீட்பு குறித்து இதற்குமுன்பே பல்வேறு பொதுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் சீமான்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்போதுதான் சாதிய அமைப்பு தலைவர்களையும் மேடையேற்றுகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் நா.த.க-வுக்கு இளைஞர்களின் வாக்குகள் பக்க பலமாக இருக்கிறது. அதுமட்டுமே போதாது என்கிற மனநிலையில்தான் தேர்தலில் போட்டியிடாத பல்வேறு சமூக அமைப்புகள் நா.த.க-வுக்கு ஆதரவளிக்கும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நோக்கம் எனில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாத, அதனை எதிர்த்துப் பேசிவரும் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் அந்த மேடையில் ஏன் எவரும் விமர்சிக்கவில்லை? 1.15 மணி நேரம் பேசிய சீமான் `சாதி பிரதித்துவத்துக்கு பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸும் எதிரி என்றுவிட்டு காங்கிரஸை சாடத் தொடங்கிவிட்டார்.
பல்வேறு மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முற்பட்டும் ஸ்டாலின் ஏன் முயற்சிக் கூட எடுக்கவில்லை என விளாசியவர் மோடியின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. இதனால் பா.ஜ.க விமர்சிக்கவும் சீமான் சமீபகாலமாக விரும்புவதில்லையோ என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது” என்றனர்

அதேசமயம், வலதுசாரி சிந்தனைக் கொண்டவர்களையும் சீமான் அரவணைக்கிறார் என்ற விமர்சனமும் நாளுக்கு நாள் அதிகரிக்கதான் செய்கிறது” என்றனர்.
`திராவிடம் ஒருபோதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாது’ என சீமான் பேசிய நிலையில், தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சிவ ஜெயராஜை தொடர்பு கொண்டோம்

“பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கொத்தடிமை வேலை பார்க்கும் அரசியல் தற்குறிகளின் விமர்சனங்களெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதேசமயம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தி.மு.க சாதிவாரி கணக்கெடுப்பு எதிரானவர்களா..
மாநில அரசு நடத்தும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் செல்லுபடியாகாது என நிரூபிக்கப்பட்டு பிறகும் தி.மு.க-வை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் எனில் அது அவர்களுக்கு வழங்கப்பட்ட அஜெண்டா. சரி, சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் மக்களை சாதியால் பிரிக்க நினைக்கிறார்கள் என்ற மோடியை சீமான் எங்காவது விமர்சித்தாரா.. ?” எனக் காட்டமாக வினவினார்.

“பஞ்சமி நில மீட்பு கோரிக்கையை என்பது சாதியை சார்ந்த பிரச்னையல்ல. அது அனைத்து சமூக மக்களின் கோரிக்கை என்பதை நிறுவவே பலதரப்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தோம்” என்கிறார் நா.த.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன்.
அவர் பேசுகையில் “பஞ்சமி நில மீட்பு என்பது ஒரு சாதியின் பிரச்னையாக பார்க்கப்படும் சூழலில் அனைவரையும் ஒருங்கிணைத்து அது தமிழ் இனத்தில் கோரிக்கை என நிறுவியிருக்கும் ஒரே கட்சி நா.த.க-தான். பஞ்சமி நில கோரிக்கை நாங்கள் கோரிக்கையை கையிலெடுப்பதால் பதற்றத்தில் இருப்பவர்கள் எங்கள்மீது சாதிய முத்திரை குத்துவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. `சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது, சாதிய மோதல்களை கிளப்பிவிடுவது, சாதிய ஓரவஞ்சனை கொள்வது திராவிட பண்புகள் தமிழர்கள் எங்களுக்கில்லை.

அதேபோல், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய செந்தில் பாலாஜியை ஜாமீனில் வெளியே கொண்டுவந்து மீண்டும் ஊழல் செய்ய ஏதுவாக அதிகாரத்தை கொடுக்கும் சட்ட நுணுக்கங்களை அறிந்த தி.மு.க-வுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் நுணுக்கங்கள் தெரியாதா.. அவர்களுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் விருப்பமோ. சமூக பிரதிநிதித்துவம் கொடுக்கும் எண்ணமோ இல்லை. தமிழர் நலன் என்பதே திராவிடர்களுக்கு ஒவ்வாமைதானே” என்றவரிடம்,
பா.ஜ.க விமர்சிக்க ஏன் இவ்வளவு தயக்கம் எனக் கேட்டோம் “எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை, பா.ஜ.க-வை மனிதகுல விரோதி என விமர்சிக்கிறோம். பா.ஜ.க-வுக்கு சமூகநீதியை நிலைநாட்டும் எண்ணம் துளியும் கிடையாது என அதே மேடையில் அண்ணன் பேசினார். மறுபக்கம் மாநில அரசால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திலோ ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழலிலோ பா.ஜ.க இல்லாததால் நாங்கள் தி.மு.க-வை மட்டும் விமர்சிக்கிறோம்” என முடித்தார்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks