Modi: "இசைஞானியின் இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயம்" – தமிழில் வாழ்த்துச் சொன்ன மோடி

கடந்த மாதம் மார்ச் 8ம் தேதி லண்டனில் ‘சிம்பொனி 01 ‘Valiant” சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கில் முதன்முதலாக சிம்பொனியை அரங்கேற்றியிருக்கும் இளையராஜாவிற்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பெருமையோடு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக மகிழ்ச்சிப் பொங்க அறிவித்திருக்கிறார்.

லண்டன் சிம்பொனி அரங்கேற்றத்தில் இளையராஜா

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்த இளையராஜா, “மதிப்பிற்குரிய பிரதமர் மோடி ஜியை சந்தித்து எனது சிம்பொனி 01 ‘Valiant’ குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்துத் தற்போது மோடி, “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது – உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.” என்று தமிழில் வாழ்த்துச் சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் இளையராஜா, பிரதமர் மோடியிடம் தனது இசைக் குறிப்புகளைக் காண்பித்து, சிலாகித்துப் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.