அவுரங்கசீப் சமாதி, நாக்பூர் வன்முறை: ஆர்எஸ்எஸ் ரியாக்‌ஷன் என்ன?

பெங்களூரு: அவுரங்கசீப் தற்போது பொருத்தமற்றவர் என்றும், எந்த ஒரு வன்முறையும் சமூக நலனுக்கு உகந்தது அல்ல என்றும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபையின் வருடாந்திர கூட்டம் மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அந்த அமைப்பின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபையின் வருடாந்திர கூட்டம் மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு விஜயதசமியின்போது, ஆர்.எஸ்.எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும். எனவே, இந்த வருடாந்திர கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு தொடர்பான அனைத்து திட்டங்களையும் நாங்கள் விவாதிப்போம். வரும் 23 ஆம் தேதி அதை அறிவிப்போம். இரண்டு தீர்மானங்கள் இருக்கும், ஒன்று வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியது. இரண்டாவது தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டு பயணம் மற்றும் நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியது.

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து அனைவரும் ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். இந்த செயல்களைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக பங்கேற்றது. வங்கதேசத்திலோ அல்லது உலகின் வேறு எங்குமோ இந்துக்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இது நமது கவலைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது மற்றும் அடுத்த நடவடிக்கையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதில் கவனம் செலுத்தும் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா விரிவாக்கம் தொடர்பாக விவாதிக்கப்படும். மேலும், குடும்ப விழிப்புணர்வு, சமூக இணைப்பு, குடிமக்கள் விழிப்புணர்வு, மக்கள் பங்கேற்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். நூற்றாண்டு விழாவின்போது, ​​தேசிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சங்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது. தேசிய வளர்ச்சியின் நலனுக்காக என்ன செய்ய முடியும் என்பதில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கவனம் செலுத்துவார்கள். இந்த கலந்துரையாடலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் பங்கேற்பார்கள்” என தெரிவித்தார்.

அவரங்கசீப் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில் நடந்த வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுனில் அம்பேத்கர், “எந்த ஒரு வன்முறையும் சமூக நலனுக்கு உகந்தது அல்ல. மகாராஷ்டிர வன்முறை தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என தெரிவித்தார்.

அவரங்கசீப் சமாதியை அகற்றுவது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பலன் தருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுனில் அம்பேத்கர், “தற்போது அவர் பொருத்தமற்றவர்” என குறிப்பிட்டார்.

முன்னதாக, அவரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி விஹெச்பி அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, நாக்பூரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். விஹெச்பி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மத நூல் அவமதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து இந்த வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 10 குழுக்களை மகாராஷ்டிர காவல்துறை நியமித்துள்ளது. இதுவரை 50 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் அதிகாரி (டிசிபி) ராகுல் மக்னிகர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.