இந்தியா, ரஷ்யா, சீனாவுக்கு ட்ரம்ப் போடும் கூட்டல், கழித்தல் கணக்கு; கைகொடுக்குமா?! | Explainer

“நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் உண்மையாக பணியாற்றுவேன் என்றும், அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் சத்தியம் செய்கிறேன். அதனால், எனக்கு உதவுங்கள் தோழர்களே!”

கடந்த ஜனவரி 21-ம் தேதி, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் செய்த சத்திய பிராமணம் இது.

அன்றிலிருந்து இன்று வரை உலக நாடுகள் பல, அமெரிக்காவிலிருந்து ‘எப்போது… என்ன… வரும்?’ என்று ஒருவித ஜெர்க்கிலேயே இருக்கிறார்கள். ஆம்… அமெரிக்காவில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களும் உலகின் மூளை முடுக்கு எங்கிலும் எதிரொலிக்கும். இதற்கு காரணம்…

நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்,…
  • உலக நாடுகளிலேயே அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா;

  • உலக அளவில் தொழில்நுட்பத்தில் கோலோச்சும் நாடு அமெரிக்கா;

  • பல நாடுகளுக்கு உணவுப்பொருட்கள், கணினி முதல் ராணுவ தளவாடங்கள் வரை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா;

  • நம் வீடுகளில் ஆசை ஆசையாய் வாங்கும் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய நாடு அமெரிக்கா;

  • உலக அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா;

  • உலகிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ள நாடு அமெரிக்கா.

– இப்படி ‘உலக நடப்புகளில் அமெரிக்காவிற்கு ஏன் முக்கிய பங்கு உள்ளது?’ என்பதற்கு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆக, அனைத்து துறைகளிலும் டாப் இடத்தில் இருக்கும் அமெரிக்கா ‘என்ன முடிவு எடுத்தாலும்’ அது அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். தற்போதைய நிலவரத்தின் படி, அமெரிக்காவிற்கு இணையாக கவனிக்கப்படும் மூன்று நாடுகள் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகும்.

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்தால் இந்த மூன்று நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன… நிகழப்போகின்றன என்பதைப் பார்ப்போம்.

இப்போது உலகம் முழுவதும் முக்கியமாக பேசப்படும் டாப்பிக், ‘ரஷ்யா – உக்ரைன் போர்’. இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உலகம், அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்த சமயம், இந்தப் போர் தொடங்கியது. இப்போது வரை முடிந்த பாடில்லை. இந்தப் போரினால் உலக அளவில் எண்ணெய் முதல் அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்வை கண்டது. மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இந்தப் போர் தொடர தொடர ‘இது மூன்றாம் உலகப் போரில் முடிந்துவிடுமா?’ என்கிற பயமும் அனைவரையும் எட்டிப்பார்க்கிறது.

புதின் நல்ல நண்பர்!

இந்த நிலையில் தான், அமெரிக்காவில் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தில் இருந்து இப்போது வரை ட்ரம்பிற்கு இருக்கும் குறிக்கோள்களில், ‘இந்தப் போரை நிறுத்த வேண்டும்’ என்பதும் ஒன்று. ட்ரம்ப்பின் பர பர தேர்தல் பிரசாரத்தின் போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரை சந்தித்தப்போது, “தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னரே, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த கட்டாயம் முயற்சி செய்வேன். ரஷ்ய அதிபர் புதின் என்னுடைய நல்ல நண்பர். அவரிடம் போர் நிறுத்தம் குறித்து கட்டாயம் பேசுவேன்” என்று புதினுடனான நட்பு குறித்து பேசியிருந்தார் ட்ரம்ப். ட்ரம்ப் கூறியதுப்போல, அவரும், புதினும் நல்ல நண்பர்கள் தான்.

கடந்த மாதம், ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போதும், ‘இந்தப் போர் சீக்கிரம் முடிய வேண்டும்’ என்று தான் பேசியிருந்தார் ட்ரம்ப். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தாலும், மீண்டும் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. உக்ரைன் உடனடி 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிகாரி குழு அங்கே சென்றது. அப்போது ஊடகத்தில் பேசிய புதின், ‘ரஷ்யா சமாதானத்திற்கு தயார்’ என்று சமாதான கொடியை பறக்கவிட்டிருந்தார். ஆனால், அவருக்கு இருக்கும் முக்கிய நிபந்தனை, ‘உக்ரைனை நேட்டோ படையில் இணைத்து கொள்ளக் கூடாது’. ட்ரம்ப்பிற்கும் இந்த நிபந்தனை பெருமளவு ‘ஓகே’ தான். அவரும் உக்ரைனை நேட்டோ படையில் இணைப்பதை விரும்பவில்லை. இதைவிட, அமெரிக்க நாட்டையே நேட்டோவில் இருந்து விலக்க பிளான் செய்துகொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

ஒரே ஆப்ஷன்!

ட்ரம்ப்பின் இந்தப் போர் நிறுத்த முயற்சி வெற்றி பெற்றால் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய பிளஸ்கள் தான். தொடர் போர், அதிக செலவுகள், உயிரிழப்புகள், பிற நாடுகள் விதித்த தடைகள் என ரஷ்யா பொருளாதாரத்தில் சற்று தடுமாறி தான் வருகிறது. இந்த நிலையில், இந்தப் போர் முடிவு பெற்றால் ரஷ்யா பொருளாதாரம் ஓரளவு நிலைத்தன்மை பெறும். பிற நாடுகள், அந்த நாட்டின் மீது விதித்த தடைகளை திரும்பப்பெறும். மீண்டும் அந்த நாடுகளுடனான ரஷ்யாவின் வணிகம் உயிர் பெறும்.

ஒருவேளை, பேச்சுவார்த்தை வெற்றியை எட்டாமல், போர் தொடர்ந்தால் உக்ரைனுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவியை நிறுத்திவிடுவார் ட்ரம்ப். ‘போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது அதிக வரிகள் விதிக்கப்படும்’ என்று ஏற்கனவே ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆக, ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடி வரும் ரஷ்யாவிற்கு, இது பெரும் இடியாக போய் விழும்.

ட்ரம்ப் அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில், ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளை தள்ளுபடி செய்யவோ, குறைக்கவோ இல்லை.

காலம் காலமாக அமெரிக்காவிற்கு போட்டி நாடான ரஷ்யாவுடன் கூட கைக்குலுக்க தயாராக இருக்கிறார் ட்ரம்ப். ஆனால், சின்ன நட்பைக்கூட விரும்பாத வகையில் சீனாவிற்கான ட்ரம்ப்பின் செயல்களாக உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆனால், பொறுப்பை ஏற்கவில்லை. அப்போதே, ட்ரம்ப், “சீனாவில் இருந்து சட்ட விரோதமாக வரும் மக்கள் அமெரிக்காவில் குற்ற செயல்களிலும், போதை மருந்து கடத்தல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதை சீன அரசு தடுக்காததால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதிபர் பதவி ஏற்றதும் சொன்னதை செய்தார். சொல்லாததுமான கூடுதல் 10 சதவிகித வரியுடன் எக்ஸ்ட்ரா 10 சதவிகித வரியையும் விதித்தார்.

10 சதவிகிதம் பிளஸ் 10 சதவிகிதம்…

இந்த வரி விதிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 10 – 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது சீன அரசு. “அமெரிக்காவிற்கு உண்மையாகவே ஃபென்டனைல் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால், அமெரிக்கா அரசு சீனாவை சரி சமமாக நடத்தி, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விடுத்து, அமெரிக்காவிற்கு போர் தான் வேண்டுமானால், அது வரி போர், வணிகப் போர் என எந்தவிதமான போராக வேண்டுமானாலும், அதற்கு எதிராக சண்டையிட சீனா தயார்” என்று அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகம் பதில் கொடுத்திருந்தது.

‘பொருளாதார உச்சத்தை தொட்டுவிட வேண்டும்’ என்ற இலக்கோடு பயணித்து கொண்டிருக்கிறது சீனா. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி என வேக நடைப்போட்டு வருகிறது சீனா. ‘இது தங்களுக்கு மிகப்பெரிய போட்டி மற்றும் ஆபத்து’ என்று தான் சீனாவிற்கு எதிராக கொக்கரிக்கிறது ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு.

கடந்த சில நாட்களாக, ரஷ்யாவும், சீனாவும் மிகுந்த நட்பு பாராட்டி வருகிறது. ‘இது தொடரக் கூடாது’ என்றும் தான் புதினுடனான நட்பை வலுபடுத்துகிறார் ட்ரம்ப். முன்பு சொன்னது மாதிரி, காலம் காலமாக இருந்து வரும் போட்டியாளர் ரஷ்யா, புது போட்டியாளர் சீனா இரண்டு பேரும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவை பெரும் ஆபத்து சூழும் என்று ட்ரம்ப் ரஷ்யாவுடன் நட்பை கொண்டு வர பெரும் முயற்சிகளை போட்டு வருகிறார்.

சீனாவும், அமெரிக்காவும் போட்டுக்கொள்ளும் இந்த வணிக போரால், பிற நாடுகள் நிச்சயம் பாதிக்கும். உலகில் இருக்கும் பிற நாடுகள், இந்த இரு நாடுகளுடனும் வணிகம் செய்து வருகிறது. இந்த இரு நாடுகளும் மாற்றி மாற்றி போட்டு வரும் வரிகளால், அவர்கள் உள் நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் அதாவது இறக்குமதி செய்த பொருட்களை வைத்து உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயரும். இந்தப் பொருளை பிற நாடுகள் வாங்கும்போது, அந்த நாடுகளும் அதிக விலைவாசியால் பாதிக்கப்படுவார்கள். இந்த சூழலில், சீனாவிற்கு எதிரான நிலைபாட்டையே எடுத்துள்ளது ட்ரம்ப் அரசு.

‘இந்த’ நட்பு நமக்கு ஆபத்து

ரஷ்யா, சீனா பக்கம் இருந்து திரும்பி தற்போது இந்தியா பக்கம் ரூட்டை மாற்றுவோம். தேர்தல் பிரசாரத்தில் இருந்து இப்போது வரை, வரி பற்றி எங்கெல்லாம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம், ‘இந்தியா அமெரிக்கா மீது 100 சதவிகித வரியை விதிக்கிறது’ என்று கறை வைத்துக்கொண்டே இருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 100 சதவிகித வரியை விதிக்கும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். ஆனால், இதற்கு எந்த பதிலும் இன்னமும் இந்தியாவின் பக்கம் இருந்து எழவில்லை. அமெரிக்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை போகிறது என்பதோடு இந்திய அரசு பதிலை நிறுத்திகொண்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே இறங்குமுகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்திய பங்குச்சந்தை இன்னமும் மீளவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் எடுத்த அடுத்தடுத்து கொள்கைகளும் பங்குச்சந்தையின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.

இப்போது தான் பணவீக்கத்திலிருந்து இந்தியா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இப்போது இந்தியா மீது அதிக வரியை அமெரிக்கா விதித்தால் மீண்டும் பணவீக்கம், விலைவாசி உயர்வு நோக்கி இந்தியா நகரும்.

இது உண்மையா?!

இதற்கெல்லாம் தீர்வாக இந்தியா அமெரிக்கா உடனான உறவை தாண்டி, அமெரிக்காவை சுற்றியுள்ள நாடுகள், இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் என அனைத்து நாடுகளுடனும் நட்பை விரிவுபடுத்த வேண்டும். முடிந்தளவு அமெரிக்கா உடன் வணிக ஒப்பந்தம் போடுவதில் முனைப்பு காட்ட வேண்டும். உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டு பொருட்களை கொள்முதல் செய்வது என இவை அனைத்தையும் அதிகப்படுத்த வேண்டும், இந்தியா.

பெரும்பாலான இந்திய மக்களின் அதிகபட்ச சேமிப்பு ‘தங்கம்’. ட்ரம்ப்பின் வருகையினால் மற்றும் கொள்கையினால், சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்து, இந்தியாவிலும் தங்கம் விலை தாறுமாறாக விலை உயர்ந்துகொண்டு வருகிறது.

ட்ரம்ப்பின் பொருளாதார கொள்கைகளின் விளைவுகள் குறித்து நமக்கு விவரிக்கிறார் பொருளாதார நிபுணர் க. ஜோதி சிவஞானம்.

“ட்ரம்ப்பின் தற்போதைய கொள்கை ‘அமெரிக்கா ஃப்ரஸ்ட்’ என்பதாகும். அமெரிக்காவில் வணிக பற்றாக்குறை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம்) இருக்கிறது என்றும், பிற நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கிறது என்றும் உலகின் பிற நாடுகளின் மீது அதிக வரிகளையும், பரஸ்பர வரிகளையும் அடுக்கி வருகிறார் ட்ரம்ப். இதனால், உலகின் அனைத்து நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை தவிர, அனைத்து நாடுகளும் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டன. பொதுவாக, இந்த மாதிரியான அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ரஷ்யா தான் மிகப்பெரிய எதிர்ப்புகளை தெரிவிக்கும். ஆனால், இப்போதைக்கு அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒன்று போய்கொண்டிருப்பதால், ரஷ்யா பெரிதாக வாய் திறக்கவில்லை. ஆனால், சீனாவோ, அமெரிக்காவின் இப்படிபட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பையும், பதிலடியாக அமெரிக்கா மீது வரி விதிப்பையும் செய்து வருகிறது.

பொருளாதார நிபுணர் க. ஜோதி சிவஞானம்

அமெரிக்காவில் செய்யப்படும் ஆயுத உற்பத்திகளுக்கு தேவைப்படும் டங்க்ஸ்டன் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள், சீனாவில் இருந்து தான் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் அதிக வரிகளால், இந்த இறக்குமதிகள் நிறுத்தப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

பொதுவாக, ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு அவ்வளவாக சரியாக இருக்காது. ராணுவ பலத்தில் ரஷ்யா பெரிதாக இருந்தாலும், பொருளாதாரத்தில் சீனா அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதனால், சீனாவின் இந்த நகர்வுகள் முக்கியமாக கருதப்படுகிறது.

அமெரிக்கா வரி விதித்த கனடா, மெக்சிகோ உள்ளிட்ட அனைத்து நாடுகளுமே அதற்கு எதிராக குரல் கொடுத்தன… வரியும் விதித்தன. இன்னும் ஒரு படி மேலே போய் கனடா, மின்சாரத்திற்கு வரி போடுவேன் என்று கூறியுள்ளது.

ஆனால், இந்தியா இதுவரை எந்த எதிர்வினையுமே ஆற்றவில்லை. சொல்லப்போனால், இந்தியா அமெரிக்காவிற்காக இறங்கி போய்கொண்டிருக்கிறது.

பட்ஜெட்டில் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பைக்குகளுக்கு வரியை குறைத்தார்கள். அமெரிக்கா இறக்குமதி விஸ்கிகளுக்கான வரியை குறைத்தார்கள். மக்களின் நுகர்வை குறைக்க வேண்டும் என்பதற்காக அதிக வரியை போட வேண்டிய ஒன்று விஸ்கி. ஆனால், அதன் வரியை நாம் குறைத்துள்ளோம். இப்போது எலான் மஸ்க்கின் டெஸ்லாவையும், ஸ்டார்லிங்கையும் இந்தியாவிற்குள் அனுமதித்துள்ளோம்.

இத்தனை நாம் அமெரிக்காவிற்கு சாதகமாக செய்யும்போது, ‘அமெரிக்கா, ட்ரம்ப் நமக்காக என்ன செய்தார்கள்?’ என்ற விவாதம் இன்னமுமே இந்தியாவில் எழவில்லை. இந்தியாவுடன் எந்த ஒப்பந்தத்தையும் இதுவரை ட்ரம்ப் போடவில்லை. ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி இந்தியா மீது விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

நாங்கள்… டாலரில்…

அமெரிக்கா அதிக வரி விதித்து வருவதால் உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக டாலரிலிருந்து வெளிவருகின்றன. முக்கியமாக, பிரிக்ஸ் நாடுகள் டாலர் மூலம் வணிக செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு, ‘பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தை கொண்டுவர முயலுகின்றன’ என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா தற்போது இந்தியா உடனான வணிகத்தை இந்திய ரூபாயிலேயே செய்து வருகிறது. இப்படி ரஷ்யா அந்தந்த நாட்டின் நாணயத்திலேயே வணிகம் செய்து வருகிறது. OPEC நாடுகளும் ‘டாலரில் வணிகம் செய்ய வேண்டும்’ என்ற ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று, அவரவர் நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் செய்வதை தொடங்கியிருக்கின்றது.

இப்படி உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘நாங்கள் எங்கள் வணிகத்தை டாலரில் தான் செய்கிறோம்’ என்று கூறியுள்ளார். நமது பிரதமர் மோடி மிகவும் துணிச்சலானவர், சிறந்த பேச்சுவார்த்தையாளர் என்று கூறும் நிலையில், ‘நமக்காக வரி குறைப்பு’ என்று பேசாமல் ஏன் அமெரிக்காவிற்கு இவ்வளவு விட்டுக்கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் நமது நாணயத்திலேயே வணிகம் என்ற நிலைபாட்டை கூட இந்தியா எடுக்கவில்லை.

சமீபத்தில், “அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புகொண்டு விட்டது” என்று கூறியுள்ளார். இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான ரிலையன்ஸ் 30 சதவிகித மானியத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. ஆனால், இந்தியாவின் அரசு நிறுவனமான பாரத் அமெரிக்காவிடம் இருந்து எந்த மானியமும் இல்லாமல் எண்ணெயை இறக்குமதி செய்யப்போகிறது. மானியத்தை தவிர, இந்தியாவிற்கு ஓரளவு பக்கத்து நாடான ரஷ்யாவை விடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும்போது போக்குவரத்து செலவே மிக அதிகமாக ஆகும்.

வரி விதிப்பு முதல் ஆவணம் செய்யப்படாத அமெரிக்காவில் இருந்த இந்திய மக்களை விலங்கிட்டு அனுப்பியது வரை எது குறித்துமே இந்தியா பேசவில்லை.

பிரதமர் மோடி அருகில் இருக்கும்போதே, அமெரிக்கா – இந்தியா வணிக பற்றாக்குறை குறித்து தவறான தகவல்களை தருகிறார் ட்ரம்ப். அதற்கும் மோடி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்தியா ‘அதை செய்ய உள்ளது… இதை செய்ய உள்ளது’ என்று ட்ரம்ப் அறிவிக்கிறார். ஆனால், இந்தியா அரசு இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

அமெரிக்கா தான் ஃப்ரஸ்ட்

இப்படியான இந்தியாவின் செயல்கள் இந்தியாவிற்கும் ‘அமெரிக்கா தான் ஃப்ரஸ்ட்’ என்பதுப்போல காட்டுகிறது.

ட்ரம்ப்பின், ‘அமெரிக்கா ஃப்ரஸ்ட்’ கொள்கை அவருக்கு எதிராக கூடிய சீக்கிரம் திரும்பும். ஏற்கனவே அமெரிக்காவில் விலைவாசி அதிகம் இருக்கும் நிலையில், இப்போது ட்ரம்பின் அதிக வரி விதிப்பினால் இன்னமும் விலைகள் கூடும். இப்போது பிற நாடுகள் அமெரிக்க டாலர் பயன்பாட்டில் இருந்து வெளியே வருகிறது. அதனால், டாலரின் மதிப்பு பெரும் சரிவடையும். இதனால், அமெரிக்கா பொருளாதாரம் சறுக்கும்.

இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடனான நட்பை நல்ல முறையில் தொடர வேண்டும். அமெரிக்கா நம் மீது விதிக்கும் வரி உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும்” என்று கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.