அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் கட்டண விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோ அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ கடந்து திங்கட்கிழமை ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான கட்டண விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 299 மேல் உள்ள எந்த ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்துக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. சமீபத்தில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த புதிய கட்டண விவரங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அனைத்து போட்டிகளும் ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும்.
ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?
மார்ச் 17 முதல் மார்ச் 31 வரையில் புதிய ஜியோ சிம் அல்லது ஏற்கனவே இருக்கும் ஜியோ சிம்மிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் ரூபாய் 299 அதிகமான ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல புதிய சிம் வாங்குபவர்களும் ரூபாய் 299 அதிகமான ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஜியோ பயனர்களுக்கு ஆட்-ஆன் திட்டங்கள் மூலம் கூடுதல் இனிய சேவைகளும் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2025 போட்டிகள் இலவசமாக ஒளிபரப்படாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஜியோ சினிமா ஐபிஎல் தொடர்களை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கியது, மேலும் சில சர்வதேச போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. அதிகப்படியான ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண ஆர்வம் அளித்த நிலையில் தற்போது கட்டண விவரங்கள் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர ஜியோ பிராட் பேண்ட் திட்டங்கள் வைத்திருந்தாலும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்கலாம்.