புதுடெல்லி: காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது என்றும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த நிலையில், பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இஸ்ரேலின் இந்தக் கொடிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கிய வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்றும் ஹமாஸ் குற்றம் சாட்டியது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.