கோவை: கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுக நகராட்சி தலைவரின் மகனே கனிமவளக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியடுத்து கருங்கற்களாகவும், கிரானைட் கற்களாகவும், சிறு சிறு ஜல்லிக் கற்களாகவும், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகவும் மாற்றி, அனுப்பிவைக்கின்றனர். இந்நிலையில், குவாரிகளில் அரசின் விதிகள் மீறப்படுவதாகவும், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மதுக்கரை நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த நூர்ஜகான் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் ஷாருக்கான். கடந்த 14-ம் தேதி மதுக்கரையில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உரிமமின்றி கனிம வளங்களை கடத்திச் சென்ற இரு லாரிகளைப் பிடித்து மதுக்கரை போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், லாரி உரிமையாளர் ஷாருக்கான், ஓட்டுநர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன் கூறும்போது, ‘‘கேரளாவில் கட்டுமானப் பணிகளுக்காக, கருங்கற்கள், ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை கோவையிலிருந்து கடத்தப்படுகின்றன. குவாரிகளில் பல அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு கற்கள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு லாரியிலும் 15 யூனிட் கனிம வளம் கடத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் கனிம வளங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் வாய்ப்புள்ளது’’ என்றார்.
தமிழ்நாடு சுரங்க சான்றிதழ் பெற்ற தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம் கூறும்போது, ‘‘கல்குவாரிகளை குத்தகைக்கு எடுக்கும்போது, தினமும் எவ்வளவு அடி தோண்டப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்துதான், உரிமையாளர்கள் அனுமதி பெறுகின்றனர். ஆனால் அதைப் பின்பற்றுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து, 10 ஆண்டுகளுக்கு உரிய கற்களை வெட்டி எடுத்து விடுகின்றனர். கற்களை உடைக்க அதிக அளவு
வெடி பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். கனிம வளக் கடத்தல் அதிகரிப்பதால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு வேகமாகச் செல்லும் லாரிகளால் விபத்துகளும் நேரிடுகின்றன’’ என்றார்.
சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘கனிம வளங்களை எடுத்துச்செல்ல மின்னணு முறையில் கடவுச்சீட்டு எடுக்கின்றனர். இதற்காக ஆளும் கட்சியினருக்கு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கொடுக்க வேண்டும். இல்லையெனில் அதிகாரிகள் லாரிகளைப் பறிமுதல் செய்வர். கனிம வளங்கள் கடத்தல் குறித்து புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. பெயருக்கு சில லாரிகளை பிடிக்கின்றனர். ஆனால், யாரையும் கைது செய்வதில்லை. புகாருக்கான குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து சோதனை செய்வதில்லை’’ என்றனர்.
கனிம வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கனிம வளக் கடத்தல், குவாரிகளில் விதிமீறல்கள் போன்றவற்றைக் கண்டறிய தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படுகின்றன. உரிமம் இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உரிம ஆவணங்கள் பெறும் நடைமுறை கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மின்னணு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.