சென்னை: திமுக தொழிற்சங்க நிர்வாகி கொலை; செஞ்சியில் சடலம் புதைப்பு – நிலத் தகராறில் நடந்த கொடூரம்

சென்னை அயனாவரம், வசந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார் (71). இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.கவைச் சேர்ந்த குமார், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 16-ம் தேதி குமார், தன்னுடைய மருமகனான சேலையூரில் குடியிருக்கும் மோகன் என்பவரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் தாம்பரத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனால் குமாரை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் 17-ம் தேதி புகாரளித்தனர்.

அதன்பேரில் தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் தி.மு.க நிர்வாகி குமாரைத் தேடிவந்தனர். அவரின் செல்போன் சிக்னல்கள், அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர், தாம்பரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குமாரை இறக்கி விட்டதாகத் தெரிவித்தார்.

கொலை வழக்கில் கைதான ரவி

அதனால் ஹோட்டல் பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது குமார், கார் ஒன்றில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனால் அந்தக் கார் யாருடையது என விசாரித்தனர். விசாரணையில் குமாரை ஒரு கும்பல் கடத்திச் சென்று அவரை கொலை செய்ததோடு செஞ்சி பகுதியில் புதைத்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி (41) அவரின் கூட்டாளிகள் செந்தில்குமார், விஜய் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து குமாரின் சடலம் புதைக்கப்பட்ட செஞ்சிக்கு ரவி உள்பட மூன்று பேரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு குமாரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தாம்பரம் போலீஸார் கூறுகையில், “தி.மு.க நிர்வாகி குமாரின் உறவினர் ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் இடம் கிழக்குக் கடற்கரை சாலை உத்தண்டியில் உள்ளது. அந்த இடத்தை ஒரு கும்பல் ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. அதைத் தெரிந்துக் கொண்ட குமார், ஆக்கிரமிப்பு கும்பல் குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த நிலத்தகராறில்தான் தி.மு.க நிர்வாகி குமார் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

செந்தில்

இந்த வழக்கில் கைதான ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். அவர் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான் உத்தண்டியில் குமாரின் உறவினர் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக குமார், கானாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததும் ரவி தரப்பினர் ஆத்திரமடைந்தனர். அதனால் குமாரிடமிருந்து அந்த இடத்துக்கான ஆவணங்களை மிரட்டிப் பறிக்க ரவி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக கடந்த 16-ம் தேதி குமாரை போனில் தொடர்பு கொண்ட ரவி தரப்பைச் சேர்ந்தவர்கள், உத்தண்டி இடம் தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். அதனால் குமாரும் அயனாவரத்திலிருந்து புறப்பட்டு தன்னுடைய மருமகன் மோகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு சாப்பிட்டு விட்டு ரவி தரப்பு கூறிய தாம்பரம் பகுதிக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். அங்கு குமாரை காரில் ஏற்றிக் கொண்ட ரவி தரப்பைச் சேர்ந்தவர்கள் அவரை சிங்கப்பெருமாள் கோயில் பகுதிக்கு கடத்தி சென்றிருக்கிறார்கள். செல்லும்வழியில் குமாரின் செல்போனை அந்தக் கும்பல் சுவிட்ச் ஆப் செய்திருக்கிறது. சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு குமாரை அழைத்துச் சென்ற கும்பல் அங்கு உத்தண்டி இடத்தின் ஆவணங்களை கேட்டு அடித்து உதைத்திருக்கிறது. அப்போது குமார் இடத்துக்கான ஆவணங்களை கொடுக்க மறுத்திருக்கிறார். உடனே அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறது ரவி டீம். பின்னர் சடலத்தை ரவியின் சொந்த ஊரான செஞ்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. செஞ்சி பசுமலை முருகன் கோயில் பகுதியில் உள்ள பள்ளத்தில் குமாரின் சடலத்தை புதைத்த அந்தக் கும்பல் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு வந்திருக்கிறது. இந்தத் தகவல் தெரியவந்ததும் ரவி, அவரின் கூட்டாளிகள் விஜய், செந்தில் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இட விவகாரத்தில் தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.