புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கை அமெரிக்காவுக்கு மட்டுமே என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று அநாட்டின் தேசிய புலனாய்வுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் ரைசினா உரையாடலில் கலந்துகொண்டு இன்று பேசிய துளசி, “இந்தியா – அமெரிக்க உறவுகளை விரிவாக்கம் செய்வதில் மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கடந்த மாதம் வாஷிங்டனில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை வகுத்துள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா முதலில்’ என்பது போலவே, பிரதமர் மோடியும் ‘இந்தியா முதலில்’ என்ற வழிமுறையைக் கடைபிடிக்க உறுதிபூண்டுள்ளார். ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா முதலில்’ என்பதை அமெரிக்காவுக்கு மட்டும் என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. நமது நாடுகளுக்கு இடையிலான உறவும் நட்பும் தொடர்ந்து வளரும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதி மற்றம் பாதுகாப்பை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளார். அதில் அவர் வல்லவர். வாஷிங்டனில் நடந்த மோடி – ட்ரம்ப் சந்திப்பு, இரு பழைய நண்பர்களின் மறு இணைப்பு” என்று துளசி தெரிவித்தார்.