தி.மு.க-வின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த பி.தர்மசெல்வன் அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் தர்மசெல்வன், தி.மு.க-வில் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், வர்த்தக அணியின் மாநில துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார். கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அன்றைய தினமே மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தர்மசெல்வனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.

மா.செ பதவி கிடைத்த ஒரே வாரத்தில் தருமபுரி சட்டமன்றத் தொகுதி மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டார் தர்மசெல்வன். இந்த நிலையில்தான் “கலெக்டர், எஸ்.பி என எந்த அதிகாரியாக இருந்தாலும் நான் சொல்றதைத்தான் கேட்கணும். கேட்கலைனா, இங்க ஒரு அதிகாரி கூட இருக்க மாட்டான். எதுவாக இருந்தாலும் என்னை கேட்காம செய்யக்கூடாது. எந்த அதிகாரியாவது கேம் ஆடினால், அவன் கதை முடிஞ்சது’’ என வாய்ச்சவடால் விட்டார் தர்மசெல்வன். இந்த பேச்சு தொடர்பான குரல் பதிவு வெளியாகி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியது.
`மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா..?’ என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, ஆளும்கட்சியை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். தருமபுரி மாவட்ட தி.மு.க-வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் மார்ச் 18-ம் தேதியான நேற்று மாலை, தர்மசெல்வனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது அறிவாலயத் தலைமை. அவருக்குப் பதிலாக தருமபுரி எம்.பி-யும் வழக்கறிஞருமான ஆ.மணியை நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்து 24 நாள்களிலேயே தனது பதவியை பறிகொடுத்தவர் என்கிற தவிர்க்க முடியாத விமர்சன சொல்லுக்கும் ஆளாகியிருக்கிறார் தர்மசெல்வன். தர்மசெல்வன் மீதான நடவடிக்கையை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க-வினர் வரவேற்றிருக்கின்றனர். பதவி பறிபோகும் தகவல் தர்மசெல்வனுக்கே அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரியவந்திருக்கிறது. விளக்கம் ஏதும் கேட்காமலேயே, அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தலைமை அதிரடி காட்டியிருக்கிறது என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க-வினர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
