இம்பால்: மணிப்பூரின் பதற்றமான சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹ்மர் மற்றும் சோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 53 வயது லால்ரோபுய் பகுமேட் கொல்லப்பட்டார். இதையடுத்து, இன்று (மார்ச் 19, 2025) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குக்கி பழங்குடின பிரிவின் உள்பிரிவான ஹமர்ஸ் மற்றும் சோமி இடையே சமீபகாலமாக மோதல் நிலவிவருகிறது. கடந்த 16ம் தேதி இரவு, ஹமர் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக, சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மார்ச் 18 அன்று மாலையில் சோமி குழு ஒன்று தங்கள் சமூகக் கொடியை ஏற்ற முயன்றபோது, அதனை ஹ்மர்ஸ் குழு எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் சூரசந்த்பூர் நகரின் புறநகரில் லால்ரோபுய் பகுமேட் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஜோமி மாணவர் கூட்டமைப்பு புதன்கிழமை “காலவரையற்ற அவசரகால பணிநிறுத்தத்தை” அறிவித்தது. “அனைத்து வழக்கமான செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்படும். மேலும் அனைத்து மக்களும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். நிலைமை மேம்படும் வரை இந்த அவசரகால முடக்கம் அமலில் இருக்கும்” என்று ஜோமி மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சூரசந்த்பூர் மாவட்டத்தில் அமைதி நிலவ மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. “தனிநபர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுக்கள் ஆகியோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும். வன்முறை நமது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமைதியான மற்றும் இணக்கமான சூழலை உறுதி செய்வது அனைவரின் நலனுக்காகவுமே” என்று துணை ஆணையர் தருண் குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர், “எந்தவொரு தனிநபரும் அல்லது குழுவும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சட்டத்தை கைகளில் எடுப்போர் கடும் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இரு சமூகங்களின் தலைவர்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு துறைகளுடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று, வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, நமது மாவட்டத்தின் கூட்டு நலனுக்காக பாடுபட வேண்டிய நேரம் இது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு திரும்புவதற்கு நாம் உறுதியளிப்போம்.” என்று தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் சூரசந்த்பூர் நகரத்திலும் அதைச் சுற்றியும் கொடி அணிவகுப்புகளை நடத்தினர், அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க மக்களை வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.