சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜான் மீது சேலம் மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தற்போது ஜான் தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள பெரியபாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கடன் தரும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றுக்காக கையெழுத்து போட ஜான் அவரது மனைவி சரண்யா ஆகிய இருவரும் சென்று விட்டு திருப்பூரை நோக்கி புதன்கிழமை பிற்பகலில் காரில் வந்து கொண்டு இருந்தனர். ஈரோட்டை அடுத்த நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த இவர்களது காரை பின் தொடர்ந்து மற்றோரு காரில் வந்த மர்ம நபர்கள், ஜானின் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஜான் காரை நிறுத்திய போது மற்றொரு காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே ஜான் இறந்து விட்டநிலையில், கொலையை தடுக்க முயன்ற அவரது மனைவி சரண்யாவிற்கு கைகளில் வெட்டுப்பட்டதை தொடர்ந்து, அவர் நசியனூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய சித்தோடு போலீஸார் விசாரணை செய்து தப்பியோடிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு…
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, பொதுமக்கள் சிலர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சித்துள்ளனர். கார்த்திக் என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார். மற்ற மூவரும் காரில் அங்கிருந்து தப்பினர். இத்தகவல் அறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ரவி காரில் தப்பிச் சென்ற மூவரையும் துரத்திச் சென்றுள்ளார். சித்தோடை அடுத்த காட்டுப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பிக்க முயன்றவர்களை ஆய்வாளர் ரவி, காவலர் யோகராஜ் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்கள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர். இதனால், ஆய்வாளர் ரவி மூவரின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சுட்டுப் பிடிக்கப்பட்டவர்கள் சதீஷ், சரவணன், பூபாலன் என்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் காரில் வந்த ரௌடியை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்தது மற்றும் கொலையாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.