புதுடெல்லி: “விவசாயிகளின் தேசிய அளவிலான போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துடன் சுருக்கிவிட மத்திய அரசு முயல்கிறது,” என்று தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாய விளை பொருட்களுக்கானக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணைய சட்டம் குறித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று துவங்கியது. பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உயரதிகாரிகள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். சம்யுத் கிஸான் மோர்ச்சா என்பி (என்கேஎம் என்பி) சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் டல்லேவால், தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கேஎம்எம் சார்பில் சர்வன் பாந்தர் கேரளா ஜான், உத்தரப் பிரதேசம் சார்பில் பெலாரி உள்ளிட்ட் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர், பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசுக்கு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க மனம் இல்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதற்கு தடையாக உள்ளார்.
தேசம் தழுவிய விவசாயிகள் போராட்டத்தை, ஏதோ பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் என்பது போல குறுகிய மனப்பான்மையோடு அணுகும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். எனவே, இப்பிரச்சினையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இந்த பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த மறுக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு தேசம் தழுவிய அளவில் தீர்வு காணும் வாகையில், குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது.
பஞ்சாப் மாநிலத்துக்கு மட்டும் கொடுத்து விடலாம் என்ற உள்நோக்கோடு அம்மாநில அரசை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, நான்காவது கட்டப் பேச்சு வார்த்தை வரும் மே 4-ம் தேதி நடைபெறவுள்ளது.