வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்: வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

விருதுநகர்: மே மாதத்தில் 3-ம் கட்ட பணிகள் முடிக்கப்பட உள்ளதால், வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளை தெடார்ந்து நடந்து வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கீழடி, சிவகலை, மயிலாடும்பாறை, கங்ககொண்டசோழபுரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி துலுக்கர்பட்டி, தருமபுரி பெரும்பால என மொத்தம் 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க விருதுநகர் மாவட்டத்தில் பண்டைய நாகரிகத்தின் எச்சங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வெம்பக்கோட்டையிலும் ஏராளமான பண்டைகால வரலாற்று எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அதிக அளவிலான நுண்கற்கருவிகள், சங்ககால மட்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் தொல்லியல் அறிஞர் வேதாசலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு போன்ற ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள இடங்களில் கடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற்கருவிகள் இன்றளவும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கி.மு.4000 முதல் கி.மு.3000 வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து உள்ளார்கள் என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றது.

மேலும், சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு – சிவப்பு மண்பாண்ட ஓடுகள் மற்றும் இரும்பு பொருட்களும் வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளின் மேற்பரப்பில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.

நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என சுமார் 4,660 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2024 ஜூன் 18-ம் தேதி தொடங்கப்பட்டன.

இதுவரை, 22 குழிகள் தோண்டப்பட்டு 4,100 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று கட்ட அகழாய்வுக்கும் தலா ரூ.30 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. சூது பவள மணி, தங்கமணிகள், சங்கு வளையல்கள் உள்பட 4,100 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பண்டைய தமிழரின் பாரம்பரியமும் வரலாறும் தொன்மையானது என்பதை நிரூபிக்க முடிந்தது. அதோடு, இங்கு நுண்கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் மே மாதத்தோடு வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன.

கீழடி, சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் புதிதாக அகழாய்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் வெம்பக்கோட்டை இல்லை என்பதால் விருதுநகர் மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், ”வெம்பக்கோட்டையில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் அகழாய்வு நடத்த 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை 5 ஏக்கரில் கூட அகழாய்வு முடிக்கப்படவில்லை. இந்நிலையில், 3-ம் கட்டத்தோடு அகழாய்வுப் பணிகளை முடித்துவிடாமல் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு மேலும் பர தொல்லியல் ஆதாரங்களை கண்டறிய வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.