புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005, திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயதுவந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2006-07-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.11,300 கோடியாக இருந்தது. இது 2013-14-ம் நிதியாண்டில் ரூபாய் 33,000 கோடியாக அதிகரித்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டு கட்டத்தில் இதுவரை இல்லாத மிக அதிக பட்ஜெட் ஒதுக்கீடாகும்.
கோவிட்-19 பெருந்தொற்றின்போது சிரமப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2020-21-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் சாதனை அளவாக அரசு ரூ. 1,11,000 கோடியை செலவிட்டுள்ளது. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் அரசின் உண்மையான உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. இதேபோல், 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1,660 கோடியாக இருந்தன. அதேசமயம், 2014-15 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 3,029 கோடியாக உள்ளது. இது 2014-க்கு முந்தைய 10 ஆண்டை விட 82% அதிகமாகும்.
இந்த செயல்பாட்டில், கடந்த 2014-15 முதல் 2024-25 வரை, மத்திய அரசு ரூ. 7,81,302 கோடியை விடுவித்துள்ளது. இதன் விளைவாக 8.07 கோடி கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006-07 முதல் 2013-14 வரையிலான முந்தைய பத்தாண்டுகளில், 2,13,220 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டு, 1.53 கோடி கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி விமர்சனம்: முன்னதாக, இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “பாஜக தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது, கண்டனத்துக்குரியது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய பாதுகாப்பு வளையமாக உள்ளது.
இதனால்தான் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்பது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அந்த திட்டத்தை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் வகையில் இந்த திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடி என்ற அளவில் தேக்க நிலையிலேயே உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் 10 ஆண்டுகளில் மிக குறைவு. பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4,000 கோடி குறைவு.
மேலும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 20 சதவீதம் முந்தைய ஆண்டு நிலுவை தொகையை செலுத்துவதற்கே சரியாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா, நேஷனல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டம், கூலி வழங்குவதில் தாமதம், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கூலி உயர்வு இல்லாதது போன்றவற்றால் இந்த திட்டம் ஏராளமான சவால்களை ஏற்கெனவே சந்தித்து வருகிறது.
எனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் நாளொன்றுக்கு 400-ஆக அதிகரிக்கப்படுவதுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதனை வழங்க வேண்டும். அதேபோன்று, வேலைபெறும் நாட்களின் எண்ணிக்கையையும் ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும். எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தில் கண்ணியமான வேலைவாய்ப்பு மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் அத்தியாவசியமானது” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.