2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மைதானத்தை மாற்ற வாய்ப்பு
இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அஜின்கியா ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியும் மோதும் போட்டி கொல்கத்தாவில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிங்க: 17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!
அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதேநேரத்தில் மேற்குவங்க பாஜக தலைவர் அன்று பல ஊர்வலங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் முக்கிய காவல்துறை அதிகாரிகள் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் போட்டிக்கு தேவைப்படும் போதுமான காவல்துறையினர் இல்லாததால், வேறு இடத்திற்கு போட்டியை மற்ற வேண்டும் என்றும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இறுதி முடிவை பிசிசிஐ எடுக்கும்
இது தொடர்பான இறுதி முடிவை பிசிசிஐ எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு ராமநவமி அன்று கொல்கத்தா நைட் ரைடஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இம்முறையும் ராமநவமி அன்று நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் வேறு மைதானத்திற்கு மாற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டால் எதிரணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான லக்னோ பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகள் இனி இலவசம் இல்லை! எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?