அமெரிக்க வரலாற்றில் மிகப் பிரபலமான அதிபர் ஜான் எஃப் கென்னடி (John F Kennedy). 1960-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் 35-வது அதிபராகப் பதவியேற்ற ஜான் கென்னடி, 1963 நவம்பர் 22-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் ககாரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஜாக் ரூபி என்பவரால் அந்த நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், ஜாக் ரூபியும், 1967-ல் புற்றுநோயால் இறந்தார்.

இதற்கிடையில், ஜான் கென்னடியின் படுகொலையைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்ற லிண்டன் பி. ஜான்சன், ஜான் கென்னடி கொலையை விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி இயர்ல் வாரன் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்திருந்தார். இந்த கமிஷன், “லீ ஹார்வி ஓஸ்வால்ட் தனியாகத்தான் இந்தக் கொலையைச் செய்தார். கொலையில் எந்த சதித் திட்டமும் இல்லை” என்று விசாரணையை முடித்துக்கொண்டது. ஆனால், 1979-ல் யு.எஸ். ஹவுஸ் செலக்ட் கமிட்டியில் மூன்றில் ஒரு தரப்பினர், இந்தக் கொலையில் சதித் திட்டம் இருப்பதாய் மறுத்தனர். 2013-ல் கேலப் (Gallup) கருத்துக்கணிப்பில், 61 சதவிகிதம் பேர் ஜான் கென்னடி கொலையில் சதித் திட்டம் இருக்கும் என்றும், 39 சதவிகிதம் பேர் ஓஸ்வால்ட் தனியாகத்தான் கொலை செய்திருப்பார் என்றும் நம்பினர்.
இத்தகைய சூழலில், ஜான் கென்னடியின் கொலை தொடர்பான சுமார் 80,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அரசு நிர்வாகம் வெளியிடுமென்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆவணங்கள் தங்கள் ஆன்லைன் பக்கத்திலும் காணக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 60 வருட கொலை வழக்கின் ஆவணங்களை ட்ரம்ப் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

ஆனால், சரியாக எத்தனை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. அதோடு, அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், வல்லுநர்கள் ஒருபக்கம் வெளியான ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். முழுமையாக ஆராய்ந்து முடிக்க நிறைய நேரம் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆவணங்கள் முழுமையாக ஆராயப்பட்ட பிறகுதான் 60 ஆண்டுக்கால கொலை வழக்கின் உண்மை என்னவென்பது தெரியவரும்.
அமெரிக்க வரலாற்றில், அதிபர் பதவியிலிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட ஒரே அதிபர் ஜான் கென்னடி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.