ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத அணி என்ற சுமையை டெல்லி, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் 17 வருடங்களாகச் சுமந்துகொண்டிருக்கின்றன. அதிலும், டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளும் ஒரேயொருமுறை மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டதைத் தவறவிட்டிருக்கிறது. ஆனால், பெங்களூரு அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை.

ஒவ்வொரு சீசன் தொடக்கத்திலும், `ஈ சலா கப் நம்தே’ என்று ஆர்ப்பரிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றமே அடைகின்றனர். இவையெல்லாம், இந்த 18-வது சீசனில் மாறும், முதல்முறையாகக் கோப்பையை வெல்வோம் என்று புதிய இளம் கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில், ஈ சலா கப் நம்தே என்று கூற வேண்டாம் என கோலி தன்னிடம் கூறியதாகப் பெங்களூரு அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நிகழ்ச்சியில் இதனைப் பகிர்ந்த ஏபி டிவில்லியர்ஸ், “ஒருநாள் அந்த வார்த்தைகளை நான் கூறியபோது, விராட் கோலியிடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், `இது போன்று செய்வதை நிறுத்துங்கள்’ என்று என்னிடம் அவர் தெரிவித்தார். உண்மையில் நானும், அதை எப்போதும் கூறிக் களைத்துப்போய்விட்டேன். ஐபிஎல் 10 உலகத்தர அணிகள் மோதும் தொடர். இந்த அணிகள் உலகக் கோப்பையைக் கூட வெல்லும். வெல்வதற்கு மிகவும் கடினமான தொடர் இது. வெவ்வேறு மைதானங்களுக்குப் பயணிப்பது, வெவ்வேறு அணிகள், பலவிதமான உத்திகள், காயங்கள் என பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சீசன் முழுக்க பல்வேறு விஷயங்கள் மாறுகின்றன. ஆனால், இவையனைத்துக்கும் வழி கண்டுபிடித்து முன்னேறும் அணிதான் பொதுவாக டாப் 4 இடங்களுக்குள் வருகின்றன. அணிகள் தங்கள் சொந்த மைதான சாதகத்தைச் சரியாகப் பயன்படுத்தி முதல் நான்கு இடங்களுக்குள் வருவதை நாம் பார்க்கிறோம். எனவே, இந்த 18-வது சீசன், 18-ம் நம்பர் ஜெர்சிக்கு என்று நம்புகிறேன். அது நடந்தால், கோலியுடன் கோப்பையை உயர்த்த நான் அங்கு இருப்பேன்” என்று கூறினார்.
இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற உங்கள் கணிப்பை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.